வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் (பி.எப்.) இனிமேல் பணியாளரே நேரடியாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது. நவம்பர் 19 அன்று நடைபெற்ற பி.எப். அறங்காவலர்கள் குழு சந்திப்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் இதுவும் ஒன்று. நான் ரொம்ப ஆண்டுகளாகக் கேட்டு வந்த விஷயம், அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் காதுகளுக்கு எட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பி.எப். பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவிகிதமும், அதற்கு இணையான தொகையை உங்கள் நிறுவனமும் வழங்க, அது பி.எப்.பில் சேமிக்கப்படும். இந்தியாவிலேயே அதிகபட்ச பாதுகாப்பான உத்தரவாதமான வட்டியான 8.25 சதவிகிதம் கிடைப்பது பி.எப்.பில்தான். பணியாளரது ஓய்வுக்கால வாழ்க்கைக்கான மிகப் பெரிய ஊன்றுகோல், பி.எப். தொகைதான். அரசுப் பணியாளர்கள், தனியார் துறைப் பணியாளர்கள் என பெரும்பாலோர் பி.எப். இறுதித் தொகையை நம்பியே பல்வேறு கமிட்மென்ட்டுகளைச் செய்து வைத்திருப்பர்.
ஆனால், என்ன தலைகீழாக நின்றாலும், பி.எப். மொத்த சேமிப்புத் தொகையானது வளரவே வளராது. முன்பு ஒருவர் பி.எப். பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றால் அவரது அடிப்படை, டி.ஏ. சம்பள வரம்பு 15 ஆயிரம் என்று இருந்தது. சமீபத்தில்தான் அது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 25 ஆயிரத்தில் 12 சதவிகிதம் 3 ஆயிரம். பணியாளர் தரும் 3 ஆயிரம் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் பி.எப். கணக்கில் சேரும். நிறுவனம் தரும் 3 ஆயிரத்திலும் ஒரு பகுதிதான் பி.எப்.புக்குப் போகும். இன்னொரு பகுதி இ.பி.எஸ். எனப்படும் ஓய்வூதியக் கணக்குக்குப் போகும்.
இந்த நிலையில்தான் மத்திய அரசு 'வாலண்டரி பி.எப்.' என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. பணியாளர் தன்னுடைய 12 சதவிகிதப் பங்களிப்போடு கூடுதல் தொகை ஒன்றையும் சேர்த்து பி.எப்.புக்கு வழங்க முடியும் என்று சொல்லப்பட்டது. இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், பல தனியார் நிறுவனங்கள் இந்த வாலண்டரி பி.எப். தொகையைப் பணியாளர் சம்பளத்தில் இருந்து பிடித்து பி.எப்.பில் செலுத்த முன்வரவில்லை. நிர்வாகங்களைப் பொறுத்தவரை இது பெரிய தொந்தரவு, கூடுதல் வேலைச் சுமை என்று ஒத்துழைக்க முன்வரவில்லை. 'சேமித்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்களே செய்துகொள்ளுங்கள், எங்கள் தோள்மீது சுமையேற்றாதீர்கள்' என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
இந்த இடத்தில்தான் என்னைப் போன்றோர் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். கூடுதல் பங்களிப்புச் செய்வதற்கு எதற்கு நிறுவனங்கள் வழியாகப் போக வேண்டும்? எல்லாம்தான் ஆன்லைனுக்கு வந்துவிட்டதே. என்.பி.எஸ். தொகையை ஆன்லைனில் செலுத்துவது போன்று, வாலண்டரி பி.எப். தொகையையும் உறுப்பினரே நேரடியாக வழங்க அனுமதி வழங்கலாமே என்று கேட்டு வந்தோம்.
அதுதான் சமீபத்திய பி.எப். அறங்காவலர் கூட்டத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான முன்னேற்றம் இது. தற்போதைய கணக்குகளின்படியே போனால்கூட, பணியாளர் 2.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், அதன் வட்டி வருவாய்க்கு வரி கிடையாது. உதாரணமாக, ஒருவர் மாதம் 3 ஆயிரம் என்றால், ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரம் ரூபாய்தான் அவரது அலுவலகம் வழியாகச் செலுத்த முடியும். 2.50 லட்சம் மைனஸ் 36 ஆயிரம் என்றால் மீதம் 2.14 லட்சம் ரூபாய் வரை அவரே நேரடியாகப் பி.எப். வலைத்தளத்தில் போய்த் தன் கணக்கில் சேமிக்க முடியும்.
இப்படிக் கணக்குப் போட்டுப் பாருங்கள். பலருக்கும் 50 வயதுக்குப் பின்னர்தான் பி.எப்.பின் அருமை பெருமையே புரிகிறது. அதுவரை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பி.எப். தொகையை எடுத்துவிடுவர். ஆனால், 50 வயதுக்குப் பின்னர்தான் ஓய்வுக்காலம் என்ற பெரும்பூதம் கண்ணெதிரே பிரமாண்டமாக எழுந்து நிற்கும். அதை எதிர்கொள்ள பண ஆயுதம் எதையும் உருவாக்கி வைக்கவில்லையே என்று அடிவயிறு கலங்கும்.
0 Comments:
Post a Comment