Search

உங்களின் பணத்தை சிறப்பான முறையில் கையாள இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!

 இன்றைய இளம் தலைமுறையினருக்கு எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி நன்றாக தெரியும். அதே போன்று எப்படி செலவு செய்வது என்பது பற்றியும் தெரியும். ஆனால், சரியான முறையில் தான் சம்பாதித்த பணத்தை கையாள தெரிவதில்லை. நாம் எதற்காக சம்பாதிக்கிறோம், எந்தெந்த விஷயங்களில் நாம் செலவு செய்ய வேண்டும் மற்றும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக சம்பாதித்த பணத்தை வீணாக்கி விடுகிறோம். பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை எளிதாக எடுத்து கூற சில வழிமுறைகள் உண்டு. அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
செலவினங்கள் : வீட்டில் எந்தெந்த பொருட்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம், மாத மாதம் எவ்வளவு செலவு ஆகிறது, இதர செலவுகள் போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள பட்ஜெட் மிகவும் அவசியம். இதை தெளிவாக குறித்து வைத்து கொள்வதன் மூலம் பணத்தை நன்றாக கையாள முடியும். மேலும் இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எதிர்காலத்திற்கும் பெரிதும் உதவும்.

விதிமுறை : உங்களின் ஒவ்வொரு செலவுகளுக்கும் இவ்வளவு பகுதி மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று நீங்களே உங்களுக்கு கட்டுப்பாடு விதித்து கொள்ளுங்கள். 50% உங்களின் முக்கிய தேவைகளுக்கு செலவு செய்யலாம். மீதமுள்ள பணத்தில் 20-30% இதர செலவுகளுக்கு பிரித்து கொள்ளலாம். இறுதியாக உள்ள பணத்தை உங்கள் சேமிப்புக் கணக்கில் வைக்கலாம். இப்படி செய்வதால் பணத்தை சிறப்பாக கையான முடியும்.

கருவிகள் : பணத்தை சரியாக நிர்வகிக்க முந்தைய காலத்தை போன்று இல்லாமல் தற்போது பல நவீன வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பணத்தை கையாள கூடிய செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் உள்ளது மற்றும் தினசரி எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை மட்டும் இந்த செயலிகளில் பதிவிட்டால் போதும். இது போன்று உங்கள் மொபைலில் அனைத்தையும் வைத்திருப்பது உங்கள் பட்ஜெட்டைச் சரிபார்க்க விரைவான வழியாகும்.ஷாப்பிங் : சிலர் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வதால் மட்டுமே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடிகிறது. தெருக் கடைகளில் ஷாப்பிங், தேவையான போது மட்டும் பொருட்களை வாங்குதல் மற்றும் ஆரோக்கியமான முறையில் வீட்டில் சமைத்த உணவை உண்ணுதல் ஆகியவை இதில் அடங்கும். இப்படி செய்வதால் தேவையற்ற முறைகளில் நீங்கள் செலவு செய்வதை தவிர்க்க முடியும்.சேமிப்பு முறைகள் : உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படியாவது செலவு செய்துவிட வேண்டும் என்று எண்ணுவது சரியல்ல. உங்கள் செலவு போக மீதமுள்ள பணத்தை நல்ல முறையில் சேமிக்க பழகுங்கள். மேலும் ஒரே முறையில் சேமிக்காமல் பல்வேறு சேமிப்பு வழிகளை தேர்ந்தெடுங்கள். இது உங்களுக்கு அதிக லாபம் தரும். வங்கி சேமிப்பு, மியூஷுவல் ஃபண்ட், அஞ்சல் சேமிப்பு ஆகியவற்றில் சேமிக்க தொடங்குங்கள்.

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் - சர்வதேச ஆய்வில் புது தகவல்

 நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும்.

சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக 43 முதல் 79 வயது வரை உள்ள 88 ஆயிரம் பேரிடம் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்தது. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க சென்றவர்களைவிட இரவு 11 மணிக்கு பிறகு தூங்குபவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்தது.தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மிக சமீபத்திய கண்டுபிடிப்பின்படி தூக்கம் தொடங்குவதற்கும் இருதய பாதிப்புக்கும் இடையேயான சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது. டாக்டர் டேவிட் பிளான்ஸ் கூறும் போது, ‘‘24 மணிநேர சுழற்சியில் தூங்குவதற்கான உகந்த நேரத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நள்ளிரவுக்கு பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது. இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம். இது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

அதே நேரத்தில் இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் என்பது அனைவருக்கும் பொருந்தாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ஆஸ்டர் சி.எம்.ஐ. மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய்பட் இதுதொடர்பாக கூறியதாவது:-

தூங்குவதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சரியாக 8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் ஆரோக்கியமான இதயத்துக்கும், உடல் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது.

நன்றாக தூங்குவதற்காக மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

 மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக வயிறு உபாதைகள் ஏற்படுவது இன்றைய காலகத்தில் சாதாரணமாகிவிட்டது.

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் போன்ற காரணங்களால் வயிறு உபாதைகள் ஏற்படுவது இன்றைய காலக்கட்டத்தில் சகஜமாகிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் 5 இல் ஒருவர் வயிற்று வலி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.காலையில் எழுந்ததும் 2 மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிடுங்கள்
காலையில் எழுந்ததும் குறைந்தது 2 மணி நேரம் கழித்து காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதற்குக் காரணம், உடலின் செரிமான அமைப்பு பல மணிநேரம் தூங்கிய பிறகு வேலை செய்யத் தொடங்குகிறது மற்றும் அது சுறுசுறுப்பாக செயல்பட சிறிது நேரம் தேவைப்படுகிறது. வயிற்றுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற பொருட்களை வெறும் வயிற்றில் காலை உணவில் சாப்பிடக்கூடாது. அத்தகைய விஷயங்கள் என்னவென்று நாங்கள் உங்களுக்கு இங்கே கூற உள்ளோம். 

பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது
பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்கள் நார்ச்சத்து நிறைந்தவை. அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் கூடுதல் சுமை ஏற்படும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை மற்றும் வயிற்று வலி போன்றவையும் ஏற்படும், எனவே காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஜூஸுடன் நாளைத் தொடங்க வேண்டாம்

நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் நாளை பழச்சாறுடன் தொடங்கக்கூடாது. இதற்குக் காரணம், சாறுகள் கணையத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இது உடலுக்கு நல்லதல்ல. வெறும் வயிற்றின் காரணமாக, பழங்களில் உள்ள பிரக்டோஸ் வடிவில் உள்ள சர்க்கரை கல்லீரலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவே காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.

தினமும் காபி குடிப்பது கெட்டதா? காபி குடித்தால்தான் வேலை ஓடுமா?

காபி வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்
ஒரு கப் காபியுடன் நாளைத் தொடங்குவது மிகவும் பொதுவான நடைமுறை. வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அசிடிட்டி ஏற்படும். இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், செரிமான மண்டலத்தில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதால், சிலருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்படும், எனவே வெறும் வயிற்றில் காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும்
தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்குக் காரணம், தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது வயிற்றின் அமிலத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும். இதனால் வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கிறது.

சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லதல்ல.

சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. உண்மையில், சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால், வயிற்றில் அமிலம் வேகமாக உருவாகத் தொடங்குகிறது. இந்த பழங்களில் பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக, காலையில் வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பு குறைகிறது.

குழந்தைகளுக்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பது எப்படி?

 பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.ன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவரால் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை எட்ட முடியாமல் போகிறது. அதே சமயம் சுமாராகப் படித்து, நிச்சயம் இல்லாத பணியில் இருக்கும் ஒருவரால் பொருளாதார வசதிகளோடு வாழ முடிகிறது. இதற்கான காரணம், பணத்தை கையாளுவதற்கான அடிப்படை, அவர்களுடைய குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியிருக்கும் என்பதே. குழந்தைகளுக்கு கல்வியோடு, பணம் குறித்த அறிவை வளர்ப்பதும்  முக்கியமானது. அதற்கான சில வழிகள்:


இளம் வயதிலேயே தொடங்குங்கள்
குழந்தைகள் 8 வயதாகும்போது ஓரளவுக்கு இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குப் பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பணம் என்றால் என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குங்கள். பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கடைக்கு செல்கையில் கவுண்டரில் பணம் கொடுக்கும்போது, குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுங்கள். இது பணம் குறித்த அடிப்படையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும்.

சேமிக்கும் பழக்கம்
பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.

உண்டியல் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத்தரலாம். எதிர்காலத்திற்காக அல்லாமல், அவர்கள் விரும்பும் பொம்மை வாங்குவது போன்ற குறுகிய கால இலக்குகளுக்காக சேமிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.

பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கையும் அவர்களுக்குத் தொடங்கித் தரலாம். இதன் மூலம் அவர்களது சேமிப்பு, வட்டியின் மூலம் பெருகும் வழியையும் காட்டலாம்.

பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்
பிள்ளைகளுக்கென்று சில பொறுப்பான பணிகளை வீட்டில் கொடுங்கள். அதைச் செய்து முடிக்கும்போது மட்டும், அவர்களுக்குப் பாக்கெட் மணி கொடுங்கள். அதுதான் அவர்களின் சம்பளம். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை சரியான நேரத்துக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். இதன் மூலம் எந்தவொரு கெட்ட பழக்கத்தின் பின்பும் உங்கள் குழந்தைகள் செல்ல மாட்டார்கள். சரியானமுறையில்  செலவு செய்வது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். உதவி செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்
பிறருக்கு உதவுவதைப் பழக்கமாக மாற்றி அந்த மதிப்பை வளர்க்கலாம். பிறந்த நாள் அல்லது பண்டிகை நாட்களில் குறிப்பிட்ட உதவிகளைச் செய்யும்படி உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். கொடுப்பதன் மூலமாக பணத்தின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பணம் பெருகும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்
பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், முதலீடு செய்வது பற்றியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். முதலீடு செய்வது சரியாகப் புரியவில்லை என்றால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

 தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடைய முடிகிறது.தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.


முதலீடு செய்வதென்றால் நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

ஈ.டி.எப். திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப். திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப். திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது. தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடைய முடிகிறது. தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.

‘சிபில் ஸ்கோர்’ என்பது என்ன?

 கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது ‘சிபில் ஸ்கோர்’ என்று ஒன்றை சொல்வார்கள். இந்த சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல. தனிநபர் கடன்களுக்கும் இது பொருந்தும். வீட்டு உபயோக பொருள் போன்ற சிறிய கடன்களுக்கு இது பொருந்தாது.

கடன் தகவல் நிறுவனம் (சுருக்கமாக சிபில்), 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப்பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

வீடு கட்ட, வாகனம் வாங்க, திருமண செலவு என வாழ்க்கையின் பல தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படி கடன் வாங்கி பயன் அடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதன் அடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்த புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிடைக்காது.

நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்த கடன் புள்ளிகளை பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது.

ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் வாழ்க்கை துணையை சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும் என இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

சேமிப்போம்... வாழ்வை வளமாக்குவோம்....

 சேமிப்பது என்பது பாரம்பரியமாக நம்மிடம் இருந்து வந்த பழக்கம். உதாரணமாக சொல்லப்போனால் பெண்கள் தினமும் சமைப்பதற்கு அரிசி எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து ஒரு பானையில் போடுவார்கள். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட பானையில் சேரும் அரிசி வறியவர்களுக்கு உதவும், சமயங்களில் அந்த அரிசியை மளிகை கடையில் கொடுத்து வேறு பண்டங்களை வாங்கி கொள்ளவும் செய்வார்கள்.அதேபோல அறுவடை முடிந்து நெல்மணிகளை விற்று வந்த காசில் முதல் செலவு என்று குறிப்பிட்ட பணத்தை எடுத்து சேமிப்பில் வைப்பார்கள். மழை பொய்த்து விளைச்சல் இல்லாத போது அந்த பணம் உதவும். ஆனால் இன்று நாம் நமக்கு வருகின்ற வருமானத்தில் என்ன செய்கிறோம்? முதல் செலவாக கடன் அட்டை களுக்கும் மாத தவணையில் வாங்கிய பொருள்களுக்கு தவணை கட்டுவது மாக உள்ளது.
வருகின்ற வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பது என்ற காலம் மாறி இனி வரக்கூடிய வருமானத்தில் இப்போதே கடன் வாங்கி விடுவது என்ற காலம் நிலவுகிறது. குறிப்பாக இந்த பேன்டமிக் எனப்படும் நோய்த்தொற்று காலத்தில் வேலை இல்லா பிரச்சனையும் வருமான குறைவும் அதிகம் பேரை பாதித்துள்ளது. இப்போது நன்றாக கவனித்தோம் என்றால் தங்கள் வருவாயில் சேமித்தவர்கள் மட்டுமே பெரிய பிரச்சனைகளுக்கு ஆளாகாமல், இன்னும் சொல்லப்போனால் சிலர் லாக் டவுன் காலத்தில் குடும்பத்துடன் வீட்டில் நிம்மதியாக இருந்தனர்.


சேமிப்பும் இல்லாமல் வருங்கால வருமானத்தை நம்பி கடன் வாங்கியவர்கள் எல்லாம் மிக துயரமான சூழலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது ஒன்றே நமக்கு சரியான பாடம் சேமிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு. பொருளாதார விஷயத்தில் மிக முக்கிய காரணி வருங்காலத்திற்கு சேமித்து வைப்பதே! உங்கள் குழந்தைகளுக்கான படிப்பு, திருமணம் மற்றும் உங்கள் வயோதிக காலத்திற்கு தேவைப்படும் பணம் எவ்வளவு என்பதை அனுமானித்து இப்போதே நீங்கள் சிறிது சிறிதாக சேமிக்கத் தொடங்கினால் போதும். ஒருவர் வாழ்வை ரசித்து நிறைவாய் நிம்மதியாய் வாழ வேண்டுமென்றால் அவருக்கு வருங்காலம் பற்றிய பயம் இருக்கக்கூடாது.வருங்காலத்திற்கு தேவையான பாதுகாப்பாய் பொருளை சேர்த்திருக்கிறோம் என்கின்ற நிறைவு வருங்காலத்தைப் பற்றிய பயத்தை போக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி. அதாவது பசுமரத்து ஆணி போல இளம் வயதில் நமக்கு கற்பிக்கப்படும் பழக்கவழக்கங்கள் நம்முடன் எப்போதும் இருக்கும். எனவே நம் குழந்தைகள் அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுப்போம். சேமிப்பு பழக்கம் நம் வாழ்க்கையை வளமாக்கி நம் வருங்காலத்தையும் சிறப்பாக்கும்.