தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா?
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். ஆனால் இப்போதெல்லாம் பலரும் நேரமின்மை, எடை இழப்பு டயட் என பல்வேறு காரணங்களைச் சொல்லி காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா? பார்க்கலாம் வாங்க!
தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்க்கும்போது, மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும். இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு, கவனச்சிதறல் அதிகம் ஏற்படக்கூடும். மூளைக்கு சக்தி இல்லாமல் போவதால், உடல் எப்போதும் சோர்வாக உணரும். சில நேரங்களில் இதனால் தலைவலி, எரிச்சலும் ஏற்படக்கூடும்.
காலை உணவைத் தவிர்ப்பது, எடை இழப்புக்கு உதவுமென பலர் நினைப்பதுண்டு. ஆனால் இது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக காலை பணிக்கு செல்பவர்களுக்கு ஆற்றல் குறையும். இதனால் பசி அதிகரிப்பதால், மதியம் அதிக உணவு சாப்பிடும் நிலை உருவாகும். பெரும்பாலும் மதியம் அரிசி உணவுகளையே நாம் உட்கொள்வதால், கலோரி அதிகமான உணவை உட்கொள்ள நேரிடும். இதேபோல இரவும் அதிக பசி எடுக்கும் வாய்ப்புள்ளது. இவையாவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
இருப்பினும் ஒருசிலருக்கு காலை உணவைத் தவிர்ப்பதால் எடை இழப்பு ஏற்படலாம். ஆனால் அதிலும் ஆபத்து உள்ளது. அதற்கு காரணம் நம் உடலானது, தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பையும் தசையையும் ஆற்றலுக்காகப் பயன்படுத்தும். 15 நாட்களுக்கு காலை உணவைத் தவிர்ப்பது, கொழுப்பை எரித்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்றாலும்கூட போதியளவு புரதம் கிடைக்காததால் தசை இழப்புக்கும் வழிவகுக்கும். இதனால் ஆரோக்கியமற்ற முறையில் எடை இழப்பு நிகழும். அந்த எடை இழப்பு நீண்டகாலத்துக்கானதாக இல்லாமல் குறுகிய காலத்துக்கானதாகவும் இருக்கும்.
அதேபோல 15 நாட்களுக்கு உணவு கிடைக்காத நிலை இருக்கும் என்பதால், உடல் சர்வைவல் நிலைக்கு சென்றுவிடும். இதனால் கலோரிகள் எரிக்கப்படும் வேகம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் எடை குறைப்பது கடினமாகிவிடும். முக்கியமாக காலை உணவைத் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவ அறிவுரையோடு கட்டுப்படுத்தப்பட்ட இண்டர்மிண்டட் ஃபாஸ்டிங் இருக்கலாம்.
சிலர் காலை உணவைத் தவிர்த்தாலும் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் குடிப்பார்கள். இதனால் அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதேபோல நீண்ட காலத்திற்கு காலை உணவைத் தவிர்ப்பது, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இது பெண்களுக்கு PCOS மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்த காலத்திலெல்லாம் 3 வேளை சாப்பிட்டார்களா? நம் உடலுக்கு 3 வேளை உணவு தேவை என்பதெல்லாம் பொய். பசிக்கும்போது சாப்பிட்டால் போதும்’ என சிலர் சொல்லி கேட்டிருப்போம். இது அடிப்படையில் உண்மைதான். ஆனால் அதற்காக எந்தவித புரிதலுமின்றி காலை உணவைத் தவிர்த்துவிடுவது சரியல்ல. நம் உடலில் ஏற்கெனவே என்னென்ன ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன, அதையெல்லாம் எப்படி சரிசெய்வது, என்ன உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் / தவிர்க்கக்கூடாது என்பதையெல்லாம் நிபுணர் ஆலோசனையோடு அறிந்து வைத்து அதன்பின்னர் உணவுக்கான நேரத்தை வகுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள், மாணவர்களுக்கு காலை உணவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது அவர்களின் மூளை வளர்ச்சியையும் படிப்பில் கவனம் செலுத்துவதையும் அதிகரிக்கிறது. போலவே கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும். அதற்கு காலை உணவு கட்டாயம் தேவை. வயதானவர்களுக்கும் காலை உணவு மிக மிக முக்கியமானது. அவர்களின் பலவீனத்தைக் குறைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இது மிகவும் உதவும். இதேபோல நீரிழிவு நோயாளிக்கு, காலை உணவு என்பது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் தேவை. எனவே அதை தவிர்க்க வேண்டாம்.
Home »
Health Tip
» 15 நாட்கள் காலை உணவை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
0 Comments:
Post a Comment