“ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்குக் பதிலாக பின்லாந்து மாடல்” - அன்பில் மகேஸ் சிறப்பு பேட்டி

         

hindutamil-prod%2F2026-03-14%2Foz5guheg%2F1114545323

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-27-ம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கூறியதாவது:

Q

மாணவர்களுக்கு 1, 2-ம் வகுப்புகளில் எழுத்துகளை திணிக்காமல் பின்லாந்து போல், நிதானமான கற்றல்முறையைக் கொண்டு வருகிறீர்கள். ‘என் பிள்ளை உடனே ஆங்கிலம் பேச, எழுத வேண்டும்’ என துடிக்கும் பெற்றோர் மனநிலையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?

A

மொழிக் கற்றலில் முதலில் கேட்டல், பேசுதல் திறன்களும், பின்னரே வாசித்தல், எழுதுதல் திறன்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் அடித்தளம் உறுதியானால் அனைத்து பாடங்களையும் புரிந்து கற்கும் திறன் வளரும். பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதாக பேசவும், எழுதவும் உரிய பயிற்சிகள் தரப்படும் என்பதை பெற்றோருக்குப் புரியவைப்போம்.

Q

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவத்தை எப்படி பிரதிபலிக்கிறது? விளிம்பு நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த என்ன அம்சங்கள் உள்ளன?

A

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. செயல்பாடுகள் அடிப்படையிலான கற்பித்தல், குழுகற்றல் போன்ற வழிமுறைகள் மூலமாக சமமான கற்றல் உறுதிசெய்யப்படுகிறது. விளிம்புநிலை மாணவர்களின் கற்றல் அடைவு கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் தேவைப்படுவோருக்கு உடனடி குறைதீர் கற்றல் வழங்கப்படும்.

Q

மனப்பாடத் தேர்வு முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திறன்சார் மதிப்பீடு எவ்வாறு அளவிடப்படும்?

A

மனப்பாடம் மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதுடன், உண்மையான புரிதலை அளவிட உதவாது. எனவே, புதிய சூழலில் சிந்தித்து செயல்படுதல், பிரச்சினை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

Q

புதிய பாடத்திட்டத்தில், புத்தகவாசிப்புக்கும், டிஜிட்டல் திரைக்கல்விக்கும் இடையே சமநிலை எப்படி பேணப்படும்? கிராமப்புறங்களில் இணையவசதி சிக்கல்களுக்கு இடையே இதைச் சாத்தியப்படுத்து வது எப்படி?

A

வாசிப்பு மற்றும் எழுதுதல் அடிப்படை திறன்களாகும். அவை பாடப்புத்தகங்கள் வழியே உறுதிசெய்யப்படும். டிஜிட்டல் தளங்கள் கற்றலை மேம்படுத்தும் துணைக் கருவியாக இருக்கும். நேரில் காண முடியாத கடினமான கருத்துகளை விளக்க மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இணைய வசதி கிடைக்காத கிராமப்புறங்களிலும், ஆசிரியர் கையேடுகளில் வழங்கப்பட்ட கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி கற்றல் தொடரப்படும்.


Q

சிபிஎஸ்இயுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய பாடத்திட்டம் மென்மையாக இருக்கிறது. இதனால் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் பின்தங்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

A

நமது பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் இன்றி திறன் அடிப்படையில் புரிந்து கற்பதால், நீட் உட்பட எந்தவொரு போட்டித் தேர்வையும் தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்வார்கள். இவற்றை அமல்படுத்தவும், வகுப்பறை செயல்பாடுகளை கட்டமைக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Q

தற்போதைய சூழலில் பாலியல் கல்விக்கான தேவையுள்ளது. மாணவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேடுடச்’ விழிப்புணர்வுடன், வயதுக்கேற்ற அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி வழங்கப்படுமா?

Educational Resources

A

தொடக்க வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு வயதுக்கேற்ற விழிப்புணர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பற்றி நேர்மறையாக எண்ணவும், பாதுகாப்பு உணர்வு பெறவும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் வளரிளம் பருவத்தினருக்கு உடல் மாற்றங்கள், பாலின சமத்துவம்,உணர்வு மேலாண்மை போன்றவை குறித்து செயல்பாடுகள் மற்றும் கலைகள் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகபயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Q

பழைய பாடத்திட்டத்தில் 3-ம் வகுப்பு முடித்து, புதிய பாடத்திட்டத்தில் 4-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முன்கள நடவடிக்கை என்ன? 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

A

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இரு பாடத்திட்டங்களை இணைக்கும் பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Q

புதிய பாடத்திட்டம் முழுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டுமே சார்ந்ததா? அல்லது மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களையும் ஏற்றுள்ளீர்களா?

A

மாநில கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை, சமத்துவம், பண்பாடு, சமூக மற்றும் எதிர்கால தேவைகளை இலக்காக கொண்டு நமது மாநிலத்தின் சூழலுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Q

பாடத்திட்டம் அமலுக்கு வந்தபின்மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மாவட்டவாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா?

A

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆய்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையளத்தில் பதிவேற்றப்படும். மேலும், அந்தத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கற்றல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment