மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 11-ம் கட்ட அகழாய்வுப் பணியையும், திறந்தவெளி அகழ் வைப்பகத்தையும் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முந்தைய ஆட்சிகளில் தொடங்கப்பட்ட அனைத்து நல்லதிட்டங்களையும் தவெக அரசு நிறுத்தாது. அதில் இருக்கும் குறைகள் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்.
பழிவாங்கும் அரசியல் எங்களிடம் இல்லை. கீழடி மட்டுமின்றி அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேவையான அறிவியல் சான்றுகளைத் தாக்கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளைவெளியிட, இந்திய தொல்லியல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கட்டண விவரங்களை வெளியிடாதது குறித்து புகார் வந்த பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து விதிகளை பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. வீடு, வீடாகச் சென்று அறிவுறுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிதான் தொடர்கிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
மத்திய வெளியுறவுத் துறையிடம் சட்டப்பூர்வ அனுமதி பெற்றுத்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோம். இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமணர் கல்வெட்டுகள்: இதனிடையே, மதுரை மாவட்டம் மாங்குளம் அருகேயுள்ளமீனாட்சிபுரம் மலையில் கிமு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்கை, தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த கல்வெட்டுகளை அமைச்சர் பார்வையிட்டார். கல்வெட்டுகளின் காலகட்டம், வரலாற்று முக்கியத்துவம், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு விழுமியங்கள், பொக்கிஷங்களை தமிழ்நாடு முழுவதும் மேம்படுத்த ஆய்வு செய்கிறோம். இதுபற்றி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் தொல்லியல் பொக்கிஷங்களை பாதுகாத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழடி தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக நாகரிகத்துக்கும் பெரிய தாய்மடியாகும். பத்திரிகையாளர்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தனிமனித தலையீடு இன்றி நிறைவேற்றப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடை மாற்றம் குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment