நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்தி வருகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,500 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 20 லட்சம்பேர் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 1.36 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் மறுதேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் வாரியம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இத்தேர்வில் 11.21 லட்சம் பேர் (56 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானாவைச் சேர்ந்த பன்சூல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு மருத்துவர் அஞ்சன் ராம்சந்திர நாத்தின் மகன் வேங்கடபதி வேலாயுதம், 720-க்கு 705 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து, நீட் தேர்வை எழுதினார். தமிழகத்தில் முதல் இடத்தையும், நாட்டின் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
700-க்கு மேல் 19 பேர், 690-க்கு மேல் 138 பேர், 650-க்கு மேல் 1,492 பேர், 600-க்கு மேல் 10,160 பேர், 500-க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 2.91 லட்சம் பேர், ஓபிசி பிரிவில் 5.12 லட்சம் பேர், எஸ்சி பிரிவில் 1.59 லட்சம் பேர், எஸ்டி பிரிவில் 63,716 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவில் 95,026 பேர், மாற்றுத் திறனாளிகள் 3,666 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாள். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், மாணவர்களின் நீட் மதிப்பெண்களை பெற்று, விண்ணப்பத்தில் சேர்க்கும் பணிநடந்து வருகிறது. அகில இந்தியக் கலந்தாய்வு தொடங்கிய பிறகு, தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்க உள்ளது
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment