மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக, 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்​பட்டு பள்ளி​களுக்கு அனுப்​பும்பணி​கள் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன.

தமிழக பள்​ளிக் கல்​வித் துறை​யின் கீழ், 44 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான அரசு மற்​றும் நிதி​யுதவி பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். இவர்​களுக்​கான பாடநூல்​கள் அச்​சிடும் பணியை தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது. அரசு மற்​றும் நிதி​யுதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​களுக்கு இலவச​மாக​வும், தனி​யார் பள்​ளி​களுக்கு குறைந்த விலை​யிலும் புத்​தகங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதன்​படி, வரும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 88 சதவீதப் பணி​கள் முடிவுற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.


1, 2, 3-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 Comments:

Post a Comment