படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள்

     hindutamil-prod%2F2026-01-14%2Fybpsbv2r%2FScreenshot-2026-01-14-164730

எந்தப் பொருளிலுமே டிசைனிங் என்கிற வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டிசைனிங் என்றதும் ஃபேஷன் டிசைனிங் மட்டுமேயான துறை என்று கருதிவிடக் கூடாது. கம்ப்யூட்டரில் உள்ள சிப்பை வடிவமைப்பதற்குக்கூட சிப் டிசைனர்கள் தேவை. அழகிய கட்டிடங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்டுகளுக்கும் டிசைனிங் என்பது முக்கியமானது.

மோட்டார் வாகனங்கள் போன்ற தொழில்துறைகளிலும் டிசைனிங் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜின் வடிவமைப்பிலிருந்து அதன் வெளிப்புற வடிவமைப்பு வரை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால்தான் மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். எனவே, டிசைனிங் என்பது தவிர்க்க முடியாத முக்கியத் துறையாக உருவாகியுள்ளது.

நாட்டிலேயே டிசைன் படிப்புகளைப் படிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன். பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் இதன் விரிவாக்க மையங்கள் உள்ளன. மத்திய அரசின் வணிகம் - தொழில் துறை அமைச்சகத்தின் மூலம் நடந்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மையத்தில் டிசைன் துறையில் பி.டெஸ். என்கிற நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. அனிமேஷன் பிலிம் டிசைன், எக்ஸிபிஷன் டிசைன், பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்


ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மையங்களில் கம்யூனிகேஷன் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், டெக்ஸ்டைல் அண்ட் அப்பேரல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்.

முதல் இரண்டு செமஸ்டர்கள், அதாவது முதலாண்டில் டிசைனர் ஆவதற்கான அடிப்படைப் பயிற்சியும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்புப் பாடங்களில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். முதல் முறையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் முதல் ஆண்டின் முடிவில், அதாவது இரண்டு செமஸ்டர்களில் மாணவர்களின் திறமை அடிப்படையில், சிறப்புப் பாடங்களைத் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு (Design Aptitude Test) நடைபெறும். முதல் கட்டத் தேர்வு காகிதத்தில் விடை எழுதும் வகையில் இருக்கும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

சென்னை, பெங்களூரு, விஜயவாடா, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நிலைத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தகுதி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக, ஸ்டுடியோ சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட், இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகளை எழுத வேண்டியதிருக்கும். இதில் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 60 சதவீதமும் இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 40 சதவீதமும் என்கிற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

இதேபோல டிசைன் படிப்பு தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்க சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. மும்பையில் உள்ள ஐஐடியில் பி.டெஸ். படிப்பைப் படிக்கலாம். காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங் (IITDM) கல்வி நிறுவனத்தில் டிசைன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக். படிப்பு உள்ளது. அத்துடன், இன்டகிரேட்டட் புராடக்ட் டிசைன் பாடப்பிரிவில் எம்.டெஸ். படிப்பும் உள்ளது.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment