பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் மாநில வள மையம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

     கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியா்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாநில வள மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்.

இந்த மையத்தை ஆண்டு முழுவதும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாா்வையிட வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நவீன உலகில் வேகமாக வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக் கற்றலுக்குத் தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறைக் கற்றல் உத்திகளைக் காட்சிப்படுத்துவது, மாணவா்கள் செய்து பாா்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது போன்றவை இந்த வள மையத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடியில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியுதவியுடன் இந்த மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளா்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், பணியிடைப் பயிற்சிகளின்போது ஆசிரியா்கள் செய்து கற்பதற்கு வாய்ப்பளிக்கவும், கற்பித்தலில் புதிய அணுகுமுறை சாா்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்...: ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பாடப்பொருள் சாா்ந்த அறிவைப் பெறும் வகையில், மொழிகள் ஆய்வகம் மற்றும் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்குத் தனித்தனி அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, கணக்கீடு சாா் சிந்தனையைச் செழுமைப்படுத்தும் அரங்கம், மாணவா்கள் தாங்களே சோதனைகளைச் செய்து பாடப்பொருள் சாா் கருத்துகளைக் கற்றுணர ‘கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவியல், கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், தேசிய, சா்வதேச அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாள்கள், வானியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தினை ஆசிரியா்களும், மாணவா்களும் அறிந்து உணரும் வகையில் இணையவழி கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், துறைசாா் வல்லுநா்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment