Search

தர்பூசணி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சிறந்த பழம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

 ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வது பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. சரியான உணவு பழக்கவழக்கங்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் இந்த குறைபாட்டை போக்கும் திறன் கொண்டதாக தர்பூசணி பழங்கள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறிய அளவு தர்பூசணி பழத்தில் பல நன்மைகள் மறைந்திருப்பதாக மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். உடலில் நீர்ச்சத்து அதிகமாகத் தேவைப்படும் இந்த வெயில் காலத்தில், மக்கள் பலரும் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், பலரும் இதை நீர்ச்சத்துக்காக மட்டுமே எடுத்துக் கொள்வதாக நினைக்கின்றனர். உண்மையில் இதன் மகத்துவத்தை இப்படி ஒரு வரியில் சுருக்கிவிட முடியாது. இது உடம்பின் ரத்தத்தில் உள்ள அதிகக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? எனவே, ரத்தத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பின் அளவை தர்பூசணி பழத்தால் கட்டுப்படுத்த முடியுமா என்பதை விரிவாகக் காணலாம்.


தர்பூசணிப் பழங்கள் உடலில் எல்டிஎல் எனப்படும் அடர்த்தி குறைந்த கொழுப்பின் அளவை இயற்கையாகவே நிர்வகிக்கிறது எனப் பல ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆய்வுகளின்படி, தர்பூசணிகளில் லைகோபீன் என்ற கலவை உள்ளது. இது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தாக விளங்குகிறது. இதில் சிட்ரூலின் அமினோ அமிலமும் உள்ளது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. இப்போது தர்பூசணியின் 5 நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்


நீர்சத்து: அதிகளவு நீர்சத்துக் கொண்ட பழமாக தர்பூசணி இருக்கிறது. இதில் தோராயமாக 92% விழுக்காடு அளவு நீர் உள்ளது. நம் உடலில் உள்ள நீர்சத்தின் அளவை குன்றாமல் தர்பூசணிப் பார்த்துக்கொள்ளும். குறிப்பாக வெப்பமான கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. ஏனெனில் இது பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. மேலும், சீரான உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது.


சத்துக்கள் நிறைந்தது: தர்பூசணி சத்து நிறைந்த பழம் என்பதில் மாற்றுகருத்துகள் இருக்க முடியாது. இது வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக விளங்குகிறது. இவை உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், சரியான எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் செய்கிறது .


ஆண்டி-ஆக்ஸிடண்டு பண்புகள்: தர்பூசணியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற பல ஆக்ஸிடண்டுகள் உள்ளன. லைகோபீன் ஒரு சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்டு காரணி ஆகும். லைகோபீன் இதய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்கள் சேதத்திலிருந்தும் இது நம்மைப் பாதுகாக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புத்துணர்ச்சியூட்டுகிறது: தர்பூசணியில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால் தாகத்தைத் தணித்து நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. கோடை கால பானங்களின் தேவையை தர்பூசணி வெகுவாக நிவர்த்தி செய்கிறது.


ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகள்: சில ஆய்வுகள் தர்பூசணியில் லைகோபீன் மற்றும் குக்குர்பிடசின் E போன்ற கலவைகள் இருப்பதால் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றன. இதை அவ்வப்போது உண்டு வந்தால், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.



🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment