Search

Military Sleep method : 10 நொடிகளில் தூங்கனுமா..? இந்த உத்தியை டிரை பண்ணி பாருங்க

 இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நிம்மதியின்மை, கவலை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இவையெல்லாம் இல்லாவிட்டாலும் கூட டிவி, செல்ஃபோன் போன்ற கருவிகளை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இப்படி ஏதோ ஒரு காரணத்தால் நமது தூக்கம் தடைபடுகின்றது.

மெத்தையில் படுத்து வெகுநேரமாகியும் கூட தூக்கம் வராமல் அங்கும், இங்குமாக புரளுவது, திடீரென்று எழுந்துவிட்டு மீண்டும் தூங்குவதற்காக காத்திருப்பது போன்ற பிரச்சினைகள் இன்றைக்கு அதிகரித்துள்ளன. தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் நமது உடல் நலனை பாதிக்கின்றன. அதேபோல, மனநலனையும் பாதிக்கிறது.

ஆக, படுத்த சில நொடிகளில் தூங்குவது எப்படி என்ற உத்திதான் இன்றைக்கு பலருக்கும் தேவையானதாக உள்ளது. ராணுவ தூக்கம் என்ற முறையை கையாண்டால் 10 நொடிகளில் தூங்கி விடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது எங்கிருந்து வந்தது? கடந்த 1981ஆம் ஆண்டில் லாய் புட் விண்டர் என்பவர் எழுதிய ரிலாக்ஸ் அண்ட் வின்: சேம்பியன்ஷிப் பெர்மாமன்ஸ் என்னும் புத்தகத்தில் இந்த உத்தி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைவான இடைவெளி நேரத்தில் நிறைவாக தூங்கி எழுந்திருக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த அளவுக்கு போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்க கடற்படையில் உள்ள விமானப்படை வீரர்கள் 120 நொடிகளில் தூங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது. ஏனென்றால் தூக்கமின்றி மிகுந்த மன அழுத்தத்திற்கு இவர்கள் உள்ளாகியிருந்தனர். இதனால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டது.

எப்படி கடைப்பிடிப்பது? மிகச் சரியான முறையை கையாண்டால் நமது உடலும், மனதும் ரிலாக்ஸ் அடையும். முதலில் நமது முக தசைகளை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். தோள்களை தொங்கவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் மார்பு மற்றும் கைகள் ஆகியவை ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

அதேபோல கால்கள் மற்றும் தொடை ஆகியவற்றையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 10 நொடிகளுக்கு அனைத்து சிந்தனைகளையும் விலக்கி, உங்கள் மனம் அமைதி பெறும் இடம் ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் பலன் கிடைக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் இதே உத்தியை செய்யலாம். மேலும் அந்த 10 நொடிகளை தவறவிடாமல் கற்பனை செய்ய வேண்டும்.

4-7-8 மூச்சு முறை : தரையில் படுத்து கண்ணையும், வாயையும் மூடிக் கொள்ள வேண்டும். மூக்கு வழியாக 4 நொடிகள் மூச்சை இழுத்து, 7 நொடிகள் மூச்சை அடக்கி, 8 நொடிகள் வரையில் மூச்சை வெளியிட வேண்டும். இதே உத்தியை 4 முறை பின்பற்றினால் உடனடியாக தூக்கம் வரும்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment