Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாள்வதற்கேற்ப திறனுள்ள மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:
மாநில கல்விக் கொள்கையின் தற்போதைய தேவை மற்றும் நோக்கம் என்ன? - முதல்முறையாக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். தற்போதைய நவீன காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களை காணமுடிகிறது. அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் புதிய அம்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல், உலகளவிலும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மாறிவருகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ் போன்றவை அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் இவ்வளவு காலம் செய்துவந்த விஷயங்களை மிக விரைவாகவும், திறம்படவும் செய்து சவாலாக திகழ்கின்றன. அதற்கேற்ப பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு பின்னரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
வளரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும் சமூக பொருளாதார மாற்றங்கள், புதிய திறன் தேவைகள், சமூக நீதியை நிலை நாட்டுதல் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ப நமது மாணவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல் தேவை.
.
அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதற்காகதான் ஒரு கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளாம். இது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன? - முதலில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஸ்லாஸ் தேர்வு முடிவுகள் உதவிகரமாக இருக்கின்றன. அதன் அடிப்படையில் மாணவர்கள் கற்றல் திறனை வலுப்படுத்துதல், பொறியியல், மருத்துவம் என அவர்கள் விரும்பும் துறைகளுக்கு செல்ல வழிகாட்டுதல் வழங்குதல் மற்றும் போட்டி நிறைந்த உலகத்தை எதிர்கொள்ள தயார்படுத்துதல் ஆகியவை பிரதானமாக கையாளப்பட்டுள்ளன.
இதுதவிர உடற்கல்வியை கட்டாயமாக்கியதுடன், அனைத்து வகுப்புகளுக்கு பிரத்யேக பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் உடல்நிலை, மனநிலையை சீராக வைத்து கொள்வதற்கான அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் எந்தளவுக்கு முன்னேறினாலும் மொழியறிவு மிகவும் அவசியமாகும்.
நமது இருமொழி கொள்கையின்படி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் கற்பித்தல் முறைகளை மாற்றங்கள் செய்துள்ளோம். மேலும், மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக கலைத் திறன்களை பள்ளிகளில் கொண்டு வந்துள்ளோம். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் வழங்காமல் வாழ்வியல் திறன்களையும் கற்றுதர இருக்கிறோம்.
நல்ல, தீய பழக்கங்கள், குட் டச், பேட் டச், வெற்றி-தோல்வியை சமமாக அணுகும் முறை, பிறருக்கு உதவுதல், இளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், சிக்கல்களை கையாளும் விதம், இணைய பாதுகாப்பு என மாணவர்களின் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கான திறன்கள் பயிற்றுவிக்கப்படும். இந்த திட்டத்ததுக்கான பாடத்திட்டம் தயாராகிவிட்டது. இந்த கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும். அதேபோல், மாணவர்களை தொழில்நுட்பங்களை கற்று தருவதற்காக டிஎன் ஸ்பார்க் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கையில் கூறியபடி பாடத்திட்டம் எப்போது மாற்றப்படும்? - தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகளாகிவிட்டன. மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றப்படும். அதற்கான பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
10, 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறைகளில் எத்தகைய சீர்த்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்? - ஓராண்டு முழுவதும் படிக்கும் மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது முழுமையாக இருக்காது. எனவே, ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் கற்றல் நிலை, திட்டமிட்ட கற்றலை பெறாவிட்டால் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்ற அடிப்படையில் மதிப்பீட்டு முறைகள் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது 1 முதல் 8-ம் வகுப்புகளில் தொடர்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE) நடைமுறையில் உள்ளது. 9, 11-ம் வகுப்புகளிலும் தொடர்ச்சியான மதிப்பீட்டை கொண்டு வந்து தேர்வு முடிவுகள் சார்ந்த மன அழுத்தத்தை குறைத்து ஆழமான கற்றல் ஊக்குவிக்கப்படும்.
ஏஐ, ரோபோட்டிக்ஸ் போன்ற 21-ம் நூற்றாண்டு திறன்கள் கிராமப்புற, மலைவாழ் பகுதி பள்ளிகளுக்கும் எப்போது சென்று சேரும்? - டிஎன் ஸ்பார்க் திட்டம் அதை சரிசெய்யும். அதற்கான பாடத்திட்டம் தயாரித்து பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. இதை வல்லுநர்களின் கருத்துகளை பெற்று எஸ்சிஇஆர்டி தயாரித்துள்ளது. நடமாடும் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கல்வி தொலைக்காட்சி, மணற்கேணி செயலி மற்றும் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் நகர்ப்புற - கிராமப்புற இடைவெளி குறைக்கப்படுகிறது.
தமிழகத்தில் 80 சதவீத அரசு பள்ளிகள் கிராமப்புறத்தில்தான் உள்ளன. எனவே அவர்களுக்கான தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துவிட்டோம். ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர் கற்பித்தல் முறையில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
மாநிலக் கல்விக் கொள்கையின் முன்னேற்றத்தை பொதுமக்கள் எவ்வாறு கண்காணிக்க முடியும், அதற்கான வெளிப்படை செயல்முறை உள்ளதா? - கொள்கை என்பது ஒரு வடிவமைப்புதான். இதைச் செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குகிறோம். எப்போது திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
இவை எமிஸ், பள்ளி பார்வை ஆகிய செயலிகள் வழியாக தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு கொள்கை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அறிக்கைகள் வெளியிடப்படும். பள்ளி மேலாண்மை குழுக்கள் நேரடியாக கொள்கை நடைமுறைப்படுத்துதலின் முன்னேற்றத்தை பள்ளிகளில் கண்காணிக்க முடியும்.
பள்ளி மாணவர்களிடம் இடையேயான சாதிய மோதல்கள், போதைப் பழக்கங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? - கல்விக் கொள்கையில் இதற்கான தனி பிரிவு உருவாக்கினோம். இதில் மாணவர்களை எப்படி ஒற்றுமையாக இருக்கச் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இதுதவிர மகிழ் முற்றம், மனநல ஆலோசனை உதவி எண்கள், வாழ்க்கைத் திறன் கல்வி மூலம் சமூக ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு முரண்பாடுகளை களைதல் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான பள்ளி சூழல் உறுதி செய்யப்படுகிறது
மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி இருக்கிறதா? - பள்ளிக்கல்விக்கு நடப்பாண்டு ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் தொகையையும் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது.
21-ம் நூற்றாண்டுக்கு மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவீர்கள்? - 21-ம் நூற்றாண்டுக்கு மனப்பாட கல்வி மட்டும் உதவாது. கருப்பொருள் அறிதல்,சிக்கல்களை தீர்க்கும் திறன், செயல்முறை கல்வி, குழு முயற்சி போன்ற திறன்களை மாணவர்களிடம் வளர்த்தால் மட்டுமே வருங்காலத்தில் சாதனையாளர்களாக அவர்களை உருவாக்க முடியும்.
அந்தவகையில் எதிர்காலச் சவால்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கான வழிகாட்டியாக இந்த கொள்கை விளங்கும்.
மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக பொதுவெளியில் கருத்துகள் கேட்கப்படாதது ஏன்? - இந்த கொள்கையை உருவாக்கும் பணியில், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக நல அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோரின் கருத்துகள் பெறப்பட்டன. தனித்தனியான பொதுகருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும், இந்த செயல்முறை விரிவானதாகவும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவம் பெரும் வகையிலும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )