ஆவின் பாலகம் திறக்க எவ்வளவு முதலீடு தேவை? எப்படி விண்ணப்பம் செய்வது?

 தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்களை நாம் பார்த்து விட முடியும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனம் சாதாரண மக்களும் Franchise முறையில் ஆவின் பாலகங்களை திறப்பதற்கான வாய்ப்பு வழங்குகிறது.

ஆவின் பாலகம்:

ஆவின் பாலகங்களில் கடையின் அளவை பொறுத்து பால் மட்டுமில்லாமல் ஐஸ்கிரீம், பிஸ்கட், பால்கோவா, மில்க் ஷேக், லெசி, சூடான பால், பாதாம் பால் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். அந்த வகையில் ஆவின் பாலகத்தை திறப்பது எப்படி அதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற விவரங்களை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பம் செய்வது?:

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லகூடிய இடங்களில் ஆவின் கடைகளை அமைத்தால் நாம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆவின் பாலகம் அமைப்பதற்கு நாம் சொந்தமாக இடம் வைத்திருந்து அதனை தயார் செய்யலாம் அல்லது வாடகைக்கும் கடை எடுத்து கொள்ளலாம். ஆவின் நிறுவனம் மூன்று அளவிலான கடைகளுக்கு அனுமதி வழங்குகிறது. கடை அளவு: டைப் ஏ வகை கடைகள் 8*8 சதுர அடி பரப்பில் இருந்தாலே போதும். டைப் பி வகை கடைகள் 10*10 சதுர அடி பரப்பிலும், டைப் சி வகை கடைகள் 15*15 சதுர அடி பரப்பிலும் இருக்க வேண்டும். கடைகளில் அளவை பொறுத்து நம் முதலீடும், விற்பனை விகிதமும் மாறுபடும்.

எவ்வளவு முதலீடு தேவை:

கடையின் அளவு மற்றும் நாம் அதில் விற்பனை செய்ய இருக்கும் பொருட்களின் வகையைப் பொறுத்து அந்த கடையை நிறுவுவதற்கான அனைத்து உபகரணங்களையும் அமைக்க வேண்டி இருக்கும். நாம் முன்பே கூறியதை போல இது கடையின் அளவைப் பொறுத்து மாறுபடும். இதன்படி குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இவ்வகையான கடைகளை நிறுவுவதற்கு செலவாகும் என ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.

எவ்வளவு டெபாசிட் தேவை?:
மேலும் செக்யூரிட்டி டெபாசிட் என 30 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். இது மீண்டும் திரும்ப வழங்கக்கூடிய ஒரு தொகை என ஆவின் தரப்பு தெரிவிக்கிறது. கடையை நடத்துவதற்கு என ஒரு செலவினம் இருக்கும். இதனை working capital என அழைக்கின்றனர். கடையின் விற்பனை விகிதத்தை பொறுத்து இது மாறுபடும். சராசரியாக இது மாதத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது

தொடர்பு எண்கள்:
கடை தயாராக இருக்கிறது, முதலீட்டுக்கு பணமும் இருக்கிறது என்பவர்கள் 9043099905, 9566860286 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதில் ஆவின் நிறுவன அதிகாரிகள் கடை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகள், திட்டங்கள், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்குவார்கள். கடையை நேரில் வந்து பார்வையிட்டு தொழிலை மேம்படுத்தும் ஆலோசனையும் வழங்குவார்கள்.

 எவ்வளவு லாபம்?:

கடை நிறுவியவர்கள் கடைக்கு தேவைப்படும் பொருட்களை 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆவின் செயலியில் ஆர்டர் பதிவு செய்ய வேண்டும். இந்த பொருட்கள் ஆவின் மொத்த விற்பனை டீலர்கள் அல்லது ஆவின் நிறுவன வாகனம் மூலம் விநியோகம் செய்யப்படும். பொருட்களின் பில்லிங் விலையில் டிரேட் மார்ஜின் 8 முதல் 18 சதவீதம் வரை கிடைக்கும்.


0 Comments:

Post a Comment