Education News (கல்விச் செய்திகள்)
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என பல்வேறு பட்டப்படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம், சேர்க்கை அதிகளவில் இருந்தாலும், இசை சார்ந்த படிப்புகளை விரும்பிப் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்னும் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இசைப் படிப்புகளுக்கு என கல்லூரிகள் குறைவாக இருந்தாலும், இசைப் படிப்புகளை படிக்க ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இசை நம் கலாச்சாரத்தோடு ஒன்றியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய நான்கு இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
கோவையில் செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டியில் இசைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் இயங்கி வருகிறது. கோவை இசைக்கல்லூரி கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து படிக்கின்றனர்.
இசைக் கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள்: கோவை அரசு இசைக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: கோவை ஆர்.எஸ்.புரத்தில் இசைக் கல்லூரி முன்பு இயங்கி வந்தது. அதன் பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்னர் மலுமிச்சம்பட்டிக்கு இசைக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் மூன்று வருட பி.ஏ. மியூசிக் பட்டப்படிப்பு, மூன்று வருட டிப்ளமோ இன் மியூசிக் என்ற பட்டயப்படிப்பு ஆகியவை உள்ளன.
மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய 4 பாடங்கள் உள்ளன. 17 வயது முதல் 22 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்விக் கட்டணமாக ரூ.1,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட பட்டயப்படிப்பில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் ஆகிய 6 பாடங்கள் உள்ளன. 16 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பும் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இசைக் கல்வித் தகுதியாக இசையில் இளங்கலை அல்லது பட்டயப்படிப்பு (இசைக்கலைமணி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளும் காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும்.
தவிர, மாலை நேர இசைக்கல்லூரி - இலவச சான்றிதழ் வகுப்புகள் உள்ளன. குரலிசை, வீணை, வயலின் ஆகியவை மாலை நேரக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது இரண்டாண்டு படிப்புகளாகும். மாலை நேரக் கல்லூரிக்கு வகுப்பு நேரம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகும். அனைத்து இசைப்படிப்புகளுக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் ரூ.5,150 மட்டுமே ஆகும். மேற்கண்ட இசைப் படிப்புகளுக்கு www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு நேரில் கல்லூரியை தொடர்பு கொள்ளலாம். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருகைப் பதிவின் அடிப்படையில் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரி வந்து செல்வதற்கு நடைமுறையிலுள்ள அரசு விதிமுறைகளின் படி இலவச பேருந்து பயண சலுகை அட்டையும் வழங்கப்படுகிறது.
இசைப் படிப்புகள் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இசை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அதிக வரவேற்பு உள்ளது. நிறைவான மாத ஊதியம் கிடைக்கிறது. அதேபோல், பரத நாட்டியம் படிப்பை முடித்துவிட்டால், மேற்படிப்பாக நட்டுவாங்க படிப்பை சென்னை இசைக் கல்லூரியில் படிக்கலாம். இப்படிப்பை படித்தால், நடனத்தில் அனைத்து தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதுடன், வேலையும் எளிதில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment