உப்பை அதிகமாக உட்கொள்வதால் இவ்வளவு பாதிப்பா... உலக சுகாதார நிறுவனம் கூறுவதென்ன? - Agri Info

Adding Green to your Life

November 18, 2024

உப்பை அதிகமாக உட்கொள்வதால் இவ்வளவு பாதிப்பா... உலக சுகாதார நிறுவனம் கூறுவதென்ன?

 உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சோடியம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவில் இதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் ஏற்படும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகளை 10 ஆண்டுகளில் தடுக்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சோடியம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவில் சோடியம் குறித்தான வழிகாட்டுதல்களையும் மக்கள் பின்பற்றும் வகையில் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பார்க்கையில், இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலமாக ஏறக்குறைய 1.7 மில்லியன்  இதய நோயாளிகள் மற்றும் 7 லட்சம் நாள்பட்ட சிறுநீர் நோயாளிகள் உருவாகாமல் தடுக்கலாம் எனக் கூறியுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் சோடியம் அளவைக் குறைப்பதன் மூலம் கிட்டத்தட்ட $800 மில்லியனைச் சேமிக்க முடிவதோடு, 2.4 மில்லியன் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய்களைத் தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் சோடியம் எவ்வுளவு இருக்க வேண்டும் என்பதற்கான உலகளாவிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டுள்ளது. அதிகளவு சோடியம் உட்கொள்வது உலகளவில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய சுகாதார செலவுகளை குறைக்க உதவும் என்பதோடு ஏற்கனவே சோடியம் உட்கொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் 58 உணவுகளுக்கான வரையறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமணை மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில், ஆந்திரா மக்கள் சராசரியாக 8.7 கிராம் உப்பை தினமும் உட்கொள்கின்றனர். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வரம்பான 5 கிராமை விட அதிகமாகும்.
இந்தியாவில் சோடியம் அதிகம் உள்ள பாக்கெட் உணவுகளின் நுகர்வு வேகமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக எய்ம்ஸ் மருத்துவமணை மற்றும் ஐசிஎம்ஆர் ஆய்வு குழு கூறியுள்ளது. உயர் வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் சோடியம் அளவைக் குறைப்பதன் மூலம் உணவுத் தரத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஏனென்றால் மக்கள் அதிக சோடியம் உள்ள தயாரிப்புகளுக்கு பழக்கமாகிவிட்டால், சோடியம் அளவைக் குறைப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் சோடியம் அளவு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி உள்ளதா என்பதை மதிப்பிட, ஆராய்ச்சியாளர்கள் விரிவான மாதிரியைப் பயன்படுத்தினர். மூலப்பொருள் தகவல், விற்பனைத் தரவு மற்றும் பேக்கேஜிங்கில் உள்ள சோடியம் உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு தரவை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். உப்பைக் குறைப்பதன் மூலம் இதயம் மற்றும் சிறுநீரக நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவின் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும், உலக சுகாதார அமைப்பின் சோடியம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கோடிக்கணக்கான பணத்தையும் உயிர்களையும் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலத்தில் அதிகமான மக்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதால், மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானதாகும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment