பெரும்பாலான நபர்கள் விரும்பி பருகக் கூடிய ஒரு பானம்தான் பிளாக் டீ. நம்மில் நிறைய பேருக்கு நம்முடைய காலையை ஒரு கப் பிளாக் டீ உடன் ஆரம்பித்தால் தான் அந்த நாளே நன்றாக இருக்கும். எனர்ஜி பானங்களில் முன்னிலை வகிப்பது பிளாக் டீ. சோர்வாக இருந்தால் உடனடியாக ஒரு பிளாக் டீ குடித்து பார்க்கலாம் என்று தான் நாம் யோசிப்போம். அதன்பிறகு தான் பிற சிகிச்சைகளுக்கே செல்வோம்.
பிளாக் டீ என்பது நம்முடைய சோர்வை போக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நன்மைகளை நமது ஆரோக்கியத்திற்கு தருகிறது. பிளாக் டீயில் நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. எனவே பிளாக் டீயை தினமும் சரியான அளவு குடித்து வந்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது அளிக்கும்.
பிளாக் டீ நம்முடைய இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தினமும் பிளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் மூலமாக கூட நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிளாக் டீ, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் என்றும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாக் டீயில் காஃபின் உள்ளது. மேலும் இதில் L-தியானைன் என்ற அமினோ அமிலமும் காணப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து நம்முடைய கவனிப்பு திறனை அதிகப்படுத்துகிறது. கவனிப்புத்திறனை அதிகப்படுத்துவதற்கு பிளாக் டீ உதவும் என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சேர்க்கப்படாத பிளாக் டீ, ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும். மேலும் இதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான திறன் நமக்கு கிடைக்கிறது.
எனவே தினமும் பிளாக் டீ குடிப்பது நிச்சயமாக நமக்கு நன்மை தரும். ஆனால் முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ குடிக்க முயற்சி செய்யுங்கள். பிளாக் டீயில் காணப்படும் பாலிபீனால்கள் ஒரு சில வகையான புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்று நோய்களுக்கு எதிராக பிளாக் டீ செயல்படுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் பிளாக் டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் இதனால் நம்முடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம். பிளாக் டீயில் காணப்படும் காஃபின் நம்மை அதிக ஆக்டிவாக வைத்து தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பிளாக் டீயை மிதமான அளவு குடிப்பது நல்லது.
இத்தனை நன்மைகள் தரும் பிளாக் டீயை செய்வது மிகவும் எளிது. இதற்கு 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் 1/2 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இதில் ஒரு மூடி போட்டு 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். ஒரு டம்ளரில் பிரவுன் சுகர் சேர்த்து அதில் நாம் தயார் செய்துள்ள பிளாக் டீயை வடிகட்டி சேர்க்கவும். சுவையான பிளாக் டீ இப்போது தயாராக உள்ளது.
No comments:
Post a Comment