அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான கல்லூரிகள் சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் (இமெயில்) மூலமாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயமாகிறது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இமெயில் முகவரியை வகுப்பாசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முகவரிகளை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதனுடன் மின்னஞ்சலை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்த பணிகளை அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment