ஒரு மனிதருக்கு குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இலகுவான குடல் இயக்கத்திற்கும் நார்ச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் பெரும்பாலும் போதுமான நார்ச்சத்தை கொண்டிருப்பதில்லை. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
நார்ச்சத்தின் அவசியம் என்ன?
நமது உடலில் செரிமான மண்டலத்தில் நார்ச்சத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. குடல்கள் சீராக இயங்குவதற்கும், மலசிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் நார்ச்சத்து அவசியமானதாகும். மேலும் இரத்ததில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. நாம் உணவு உட்கொள்ளும் போது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை கொடுத்து, அதிகப்படியான கலோரிகள் உட்கொள்வதை தடுப்பதும் இந்த நார்ச்சத்தின் வேலை தான்! மேலும் இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுப்பது மட்டுமின்றி, நீரிழிவு நோய் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து பெருமளவு பங்காற்றுகிறது.
நம் உடலுக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை என்பது பாலினம், உடல் ஆரோக்கியம், வயது போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு மாறுபடும். அமெரிக்க ஹார்ட் அசோசியன் அறிக்கையின்படி சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25-28 கிராம் அளவிலான நார்ச்சத்தும், ஆண்களுக்கு 38 கிராம் அளவிலான நார்ச்சத்தும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஆண் பெண் இருவருமே மேலே குறிப்பிட்டுள்ள அளவில் பாதியளவு நார்ச்சத்தை மட்டுமே உட்கொள்கின்றனர்.
நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள்:
முழு தானியங்கள்: முழு தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கோதுமை ரொட்டி, ஓட்ஸ் ஆகியவற்றில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள் : தோலோடு கூடிய பழ வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகளவு, ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: பீன்ஸ், கொண்டை கடலை, மற்றும் பட்டாணி ஆகியவற்றில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை சூப், சாலட் அல்லது சைட் டிஷ் ஆகவும் உட்கொள்ளலாம். இதனால் அளப்பரிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இதை தவிர கொட்டை மற்றும் விதை வகைகளை சேர்ந்த பாதாம் பருப்பு, சியா விதை, பூசணி விதை ஆகியவை அதிகளவு நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன.
அதிகளவு நார்ச்சத்தை எடுத்து கொண்டால் என்னாகும்?
நார்ச்சத்து உடலுக்கு தேவையானதாக இருந்தாலும் அதுவும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து நம் உடலில் சேரும் போது இரைப்பையில் அசவுகரியத்தை உண்டாக்கும். மேலும் வயிறு வீக்கம், வயிற்று போக்கு மற்றும் வாயு தொல்லை போன்ற பல உபாதைகள் ஏற்பட வழிவகை செய்யும்.
அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, ஜிங்க் ஆகியவை செரிமானத்தின் போது உறிஞ்சபடுவதையும் தடுக்கிறது. மேலும் ஒருவரின் உடலில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடும். இதன் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நார்ச்சத்தானது உடலுக்கு தேவையான அளவில் இருக்கும் போது உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கியமான செரிமான மண்டலம் போன்ற பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தினசரி உணவில் சீரான அளவில் நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொண்டால் அதனால் நமக்கு பல்வேறு வித நன்மைகள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment