அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் நூலகர் உட்பட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக் கல்வித் துறை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் அரசு மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 44 மாதிரி பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 44 மாதிரி பள்ளிகளில் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என மொத்தம் 308 பணியிடங்கள் உள்ளன.
இதில் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பூதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும். இதில் 2024 ஜூன் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரையான 9 மாதத்துக்கு தேவையான நிதி ரூ.1 கோடியே 58.40 லட்சம் தற்போது ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment