Search

பல்லாவரத்தில் பிப்.17 மெகா வேலைவாய்ப்பு முகாம்: 150-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன

 பல்லாவரம்: பல்லாவரத்தில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவும் பொருட்டு வரும் 17-ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதில் பங்கேற்று பலன் அடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மெகா வேலைவாய்ப்பு முகாம், 22 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளன. இதில் 81 ஆயிரத்து 291 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 10,321 பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

0 Comments:

Post a Comment