Search

குளிர்காலம் வந்தாலே பல் வலியும் வருமே.. இதை செய்யுங்க வலி வராம தடுக்கலாம்!

 

குளிர்காலம் வந்தாலே அழையா விருந்தாளியா பல் வலியும் வந்திடுமே என்று நினைப்பவர்கள் பல் வலி வராமல் தடுக்க கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.


குளிர்காலத்தில் இயல்பாகவே வெப்பநிலை குறைவதால் பற்களில் விரிசல் அல்லது பல் உணர்திறன் அதாவது பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் வரலாம். அதிலும் பல் வலியை அவ்வபோது அனுபவித்து வந்தவர்களுக்கு குளிர்காலம் முடியும் வரை பற்கள் உபாதையை உண்டு செய்யும். குளிர்காலத்தில் பல் வலியை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை குறிப்புகள் உங்களுக்கு உதவும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அதிக தண்ணீர் குடிப்பது பல் வலியை தடுக்குமா?

அதிகமாக தண்ணீர் குடிப்பது உண்மையில் குளிர்காலத்தில் பற்கள் பராமரிப்புக்கு சிறந்த வழியாக இருக்கும். நாள் முழுவதும் திரவம் எடுத்துகொள்வது வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. இது வெடிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் வறட்சியை போக்கும்.

காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது வாய் வறட்சி இருக்கும் நிலையில் அதிக தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் அதிகரித்து இயற்கையாகவே வாயை சுத்தப்படுத்த செய்யும். பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் வாய் பகுதியை சுத்தம் செய்ய உதவுகிறது.

பற்களை சரியான முறையில் துலக்குகிறீர்களா?


பற்களில் உணர்திறன் அதாவது கூச்ச உணர்வு இருந்தால் நீங்கள் பல் துலக்கும் முறை சரியாக உள்ளதா என்பதை கவனியுங்கள். குளிர்காலத்தில் பல் துலக்கும் பிரஷ் மென்மையானதாக இருக்கட்டும். ஈறுகளை சுற்றி பற்களை மென்மையாக துலக்கவும். பல் தேய்க்க இயற்கை பற்பொடிகள் பயன்படுத்துவது பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அல்லது பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரோண்டியம் குளோரைடு கொண்ட பற்பசைகள் வலியை தடுக்கும். பல் வலி கொண்டிருப்பவர்கள் பல் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் பற்பசை தேர்வு செய்யலாம்.

​குளிர்காலத்தில் பற்களுக்கு ஃப்ளோசிங் செய்யலாமா?​

பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க பற்களை காலை மாலை என இரண்டு வேளை துலக்குங்கள். நாள் ஒன்றுக்கு ஒருமுறை ஃப்ளோஸ் செய்யுங்கள். ஃப்ளோஸ் செய்வது வாயிலிருந்து பாக்டீரியா மற்றும் ப்ளேக் கட்டி அகற்ற செய்யும். இதனால் பல் சிதைவு மற்றும் பல் சேதம் தடுக்கப்படும்.

​குளிர்காலத்தில் இனிப்பு கட்டுப்படுத்த வேண்டும் ஏன் தெரியுமா?​


சர்க்கரை உட்கொள்வதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் டீ அல்லது காஃபி போன்ற சூடான பானங்கள் சுவையை கூட்டும். ஆனால் அதில் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஈறு அழற்சி மற்றும் ஈறு நோயை உண்டு செய்ய இதில் உள்ள சர்க்கரை கூட போதுமானது. ஏனெனில் சர்க்கரை சிறிய பாக்டீரியாக்களை ஈர்க்கிறது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகப்படியான சர்க்கரை, இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்

​அமிலம் நிறைந்த உணவுகள் மற்றும் திரவ பானங்கள் குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்​

அமில உணவுகள் மற்றும் பானங்கள் பற்களின் வெளிப்புற அடுக்கை (எனாமல்) மென்மையாக்குகின்றன. இதனால் பல் சிதைவு மற்றும் அரிப்புக்கு ஆளாகின்றன. அமிலம் நிறைந்த உணாவை கட்டுப்படுத்துவது அவசியம் என்பதோடு அமில உணவுகள் எடுத்துகொண்டால் உடனடியாக தண்ணீர் அல்லது மவுத்வாஷ் மூலம் வாய் கொப்புளிப்பது பல் பாதிப்பை தடுக்க செய்யும்.

குளிர்காலத்தில் வாய்ப்புண்கள் வந்தால் அலட்சியம் வேண்டாம்

குளிர்காலத்தில் ஹெர்பஸ் என்னும் புண்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். லிப் பாம் பயன்படுத்தலாம். குளிர் புண்களின் அபாயத்தை குறைக்க, சளி மற்றும் இருமல் வரும்போதே உரியசிகிச்சை எடுத்துவிடுவது இந்த வாய்ப்புண் உருவாவதை தடுக்கும்.

​குளிர்காலத்தில் பல் ஆரோக்கியம் பரிசோதனை அவசியமா?​

வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்வது போன்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவமனைக்கு செல்வது அவசியம். பல் பிரச்சனைகள் இதய நோய், நீரிழிவு குறிப்பாக ஈறுநோய்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளன. மேலும் பற்களில் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பற்களில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே பல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.0 Comments:

Post a Comment