Search

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமன்... என்ன காரணம்..? எப்படி தவிர்ப்பது..? மருத்துவரின் விளக்கம்..!

 • கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அர்பனைசேஷன் என்று கூறப்படும் நகரமயமாக்கலும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு சில பிரச்சனைகளும் அதே அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் முக்கியமானது, குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமன்!

  உடல் பருமன் உலகமெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாகவும் மாறி இருக்கும் நிலையில், இந்தியாவில் குழந்தைப் பருவ உடல் பருமன் நாடு முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 1.5 கோடி குழந்தைகள் ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்து உடல் பருமன் அதிகம் இருக்கும் குழந்தைகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

  இந்திய மக்கள்தொகையில் 15% அதிக உடல் பருமன் உள்ள குழந்தைகள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக வருமானம் இருக்கும் குடும்பங்களில், குழந்தைகளை பாதிக்கக் கூடிய உடல் பருமன் 60% வரை அதிகரிக்கலாம் என்ற நிலையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குழந்தைப்பருவ உடல்பருமனுக்கு என்ன காரணங்கள், இதை தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி பெங்களூருவில் உள்ள காவேரி மருத்துவமனையில் சீனியர் நியோநாடாலஜிஸ்ட் ஆலோசகரான மருத்துவர் ஸ்ரீநாத் மனிகாண்டி பகிர்ந்தவை இங்கே.

  குழந்தைகள் ஏன் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்?

 • உடல் பருமன் அல்லது அதிக எடை என்றாலே, நாம் சாப்பிட கூடிய உணவின் அளவுக்கும், செலவிடக்கூடிய கலோரிகளின் அளவுக்கும் இடையே ஏற்படக்கூடிய இம்பேலன்ஸ் அதாவது வேறுபாடுதான் காரணம். அதிகமாக சாப்பிட்டு, குறைவாக உடல் உழைப்பு அல்லது உடல் உழைப்பு இல்லாமல் போனால், கலோரிகள் அப்படியே இருப்பது உடல் எடையை அதிகரிக்கும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

  குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமனுக்கும் இதுதான் முக்கியமான காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியர்களின் மரபான முறைப்படியே கொஞ்சம் பூசிய உடல் வாகு உள்ளது, எனவே இதனால் உடல் பருமன் ஏற்படக்கூடிய சாத்தியத்தையும் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், சுற்றியிருக்கும் பல வித காரணங்கள் மற்றும் இடையூறுகளால் குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமன் அதிகரித்திருக்கிறது.

  பொருளாதார ரீதியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பாரம்பரிய உணவு முறைகளில் இருந்து நவீன உணவுகளுக்கு நவீன உணவுகளை விரும்புமாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன உணவுகளில் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை ஆகியவை நிரம்பி இருக்கின்றன.

  அதுமட்டுமில்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமாக ஸ்மார்ட் ஃபோனில் உணவு டெலிவரி, உள்ளங்கையில் உலகம் என்பதெல்லாம் ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகளை வீட்டிலேயே பெறக்கூடிய வசதியையும் வழங்கி இருக்கின்றன. எனவே ஆரோக்கியமான உணவுகளை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது! அதிகமான கொழுப்பு, கலோரிகள் இருக்கும் உணவுகள் சுவையாகத்தான் இருக்கும், இதை சில நொடிகளில் ஆர்டர் செய்து, சில நிமிடங்களில் டெலிவரி பெற்று சாப்பிடும் பழக்கம் இந்தியா முழுவதுமே பழகி பரவியிருக்கிறது.

 • ஒரு பக்கம் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறி இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் டிஜிட்டல் புரட்சி சோம்பேறித்தனமான ஒரு வாழ்க்கை முறையையும், உடல் உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  இந்த வளர்ச்சி ஒரு பக்கம் இருக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகமே முடங்கியிருந்த நிலையில் உடல் உழைப்பு, உடற்பயிற்சி, கடைகளுக்கு சென்று வருவது, காலாற நடப்பது, என்று குறைந்தபட்ச செயல்பாடுகளை தடுத்து, வீட்டுக்குள்ளேயே முடக்கியது. இந்த சூழலும் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

  இவை அனைத்துமே குழந்தைகள் இளம் வயதிலேயே ஒபீசிட்டியால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.

  குழந்தைப்பருவ உடல்பருமனால் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் உடல்நல பாதிப்புகள் : 

  பொதுவாகவே உடல்பருமன் பல விதமான வளர்சிதை மாற்ற நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது. குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இளம் வளத்திலேயே மிகவும் தீவிரமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளன. குழந்தைப்பருவ உடல்பருமன் பின்வரும் நோய்கள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

  * டைப் 2 நீரிழிவு நோய்

  * ஹைப்பர் டென்ஷன் மற்றும் மன நல பிரச்சனைகள்

  * அதிக கொலஸ்டிரால் மற்றும் அதனால் ஏற்படும் இதய நோய் பாதிப்புகள்

  * கல்லீரல் மற்றும் நுரையீரல் சிக்கல்கள்

  * நடத்தை, நினைவாற்றல் சார்ந்த கோளாறுகள்

  * ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

  * சில வகையான கேன்சர் ஆபத்து

 • உடல் பருமனாக இருக்கும் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்கள் வளர்ந்த பின் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் நோயால் அவதிப்படும் அபாயம் இருக்கிறது.

  குழந்தைப்பருவ உடல்பருமனை தடுப்பது எப்படி?

  உலக சுகாதார மையத்தின் கூற்று படி, குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன், அவர்களுக்கான தனிப்பட்ட ஆரோக்கத்தை பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக இது ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி இருக்கிறது. எனவே, இதைத் தடுப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

  * உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும்

  * அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிட வேண்டும்

  * போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

  * மொபைல் பயன்பாட்டை, டிவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்

  * சாப்பிடும் போது உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்

  * துரித உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்

  * சர்க்கரை அதிகமுள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை 21ஆம் நூற்றாண்டின் புகையிலை என்று கூறப்படுகிறது.

  போதிய அளவுக்கு உடல் ரீதியாக ஆக்டிவாக இருப்பதை பெற்றோர்கள் உறுதிசெய்ய வேண்டும். விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும், அனுமதிக்க வேண்டும். கல்வி சார்ந்த அழுத்தம் இருந்தாலும், வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்ள பெற்றோர்கள் தரப்பில் இருந்து முயற்சி தேவை. தினசரி 1 மணி நேரமாவது குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

 • குழந்தைகளுக்கு பெற்றோரும் உதாரணமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினால், குழந்தைகள் அதை எளிதாக பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்.

  குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது, 6 முதல் 12 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும். இளம் வயதில் தொடங்கினால் தான் குழந்தை எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். வயதான பின்பு புதிய உணவை பழக்கப்படுத்துவது கடினமாக இருக்கும்.

 • Click here for more Health Tip

 •  Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment