Search

குழந்தைகளிடம் நாம் கேட்க வேண்டிய 8 கேள்விகள்... பெற்றோர்களுக்கான சில ஆலோசனைகள்..!

 பெற்றெடுத்த நாள் முதல் நம் கூடவே இருக்கின்ற நம் குழந்தைகள் குறித்து நமக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனவா என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா? குழந்தைகள் அதன் வயதுக்குரிய அறிவையும், பக்குவத்தையும் தெரிந்து வைத்துள்ளதா என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

உங்களைப் பற்றி குழந்தைகளுக்கு தெரியுமா? பெற்றோரை பற்றி அடிப்படையான விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே இருவருக்கும் இடையிலான பந்தம் பலப்படும். குழந்தைகளுடன் வெளிப்படையாக பேசுவதுடன், உங்களைப் பற்றிய அடிப்படையான கேள்விகளை கேட்பது நல்ல பலனை தரும்.

நான் என்ன வேலை செய்கிறேன் தெரியுமா? தாய், தந்தை என்ன வேலை செய்கிறார்கள் என்ற அடிப்படையான கேள்விக்கு குழந்தைகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். இந்த கேள்விகளை குழந்தைகளிடம் கேட்கும்போது குழப்பம் மிகுந்த பதில் அவர்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். இருப்பினும் அதை தெளிவுப்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

தாத்தா, பாட்டியின் பெயர் என்ன? குழந்தைகளை கொஞ்சி மகிழுவதில் தாத்தா, பாட்டிகளை மிஞ்சுவதற்கு யாராலும் முடியாது. பெற்றோராகிய நாம் கூட, குழந்தைகள் சொல் பேச்சை கேட்காத சமயங்களில் சட்டென்று கோபம் கொண்டு அவர்களை அடித்து விடுவோம். ஆனால், எந்த சமயத்திலும் குழந்தைகள் மீது கோபம் கொள்ளாதவர்கள் தாத்தா, பாட்டி மட்டுமே. அவர்களுடைய பெயர்கள் குழந்தைகளுக்கு தெரியும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அத்துடன் பெற்றோர், மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, சித்தி என அனைத்து உறவுகளின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மறக்க முடியாத நினைவு எது? உங்கள் குழந்தைகள் உங்களுடன் எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள இந்தக் கேள்வி உதவும். ஏனென்றால், உங்களுடன் இருந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு குழந்தைகள் பக்குவம் அடைந்துள்ளன என்றால் அவர்களுடைய மனதில் நீங்கள் நீங்காத இடம் பிடித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

நான் கவலையாக இருக்கும்போது….. பெற்றோர்களுக்கு கடினமான சூழல் வருகிறபோது, பெற்றோராகிய நாம் கவலைகளை எதிர்கொள்கிறபோது, குழந்தைகள் அதை எப்படி கடந்து செல்கின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெற்றோரின் கவலை குழந்தைகளை பாதிக்கக் கூடாது என்றாலும், அவர்களிடம் தன்னம்பிக்கை உணர்வு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

நான் உன்னை கவனிக்கிறேன்…. குழந்தைகளை நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள், குழந்தைகளின் எண்ணங்களை மிகச் சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக உங்கள் கேள்விகள் அமைய வேண்டும். பெற்றோர் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட இது உதவும்.

நான் ஏதேனும் வித்தியாசமாக செய்கிறேனா? பெற்றோர் குறித்த விமர்சனங்களை, தன்னுடைய கருத்துக்களை குழந்தைகள் முன்வைப்பதற்கு இடமளிக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர் மீதான அதிருப்தியை குழந்தைகள் பூட்டி வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் மிகுந்த கோபமும், வன்மமும் உண்டாகும்.

என்னுடைய பலம் என்ன? தாய், தந்தைதான் ஒரு குழந்தையின் சிறந்த வழிகாட்டி ஆவார்கள். உங்களுடைய பலம் எதுவென்று தெரிந்து குழந்தைகள் அதை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அடிப்படையில் அதை குழந்தைகள் தெரிந்து வைத்துள்ளார்களா என்பதை கேள்விகள் மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உனக்கான கனவுகள் : குழந்தைகளுக்காக உங்கள் மனதில் என்னென்ன கனவுகள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள். அதை நோக்கி உங்கள் கேள்விகள் அமையும்போது குழந்தைகளின் மனதில் அவை ஆழமாக பதியும். எதிர்காலத்தில் அந்த கனவை நிறைவேற்றுவதே குழந்தைகளின் விருப்பமாக அமையும்.



0 Comments:

Post a Comment