Search

படுத்த உடனே தூங்கிடணுமா..? அப்போ இந்த டிப்ஸை நீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்..!

 தூக்கம் என்பது நம்மில் பலரால் அலட்சியமாக கருதப்படும், எனினும் நமது வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இரவு தூக்கம் என்பது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

நமது மூளையின் ஆரோக்கியம் முதல் நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் வரை தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நல்ல இரவு தூக்கத்தை தொடர்ந்து பெற்று வரும் பொழுது நமது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள். எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸாக இருப்பதற்கு தரமான தூக்கம் உதவுகிறது. நாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நமது உடலில் இருக்கக்கூடிய உள்ளுறுப்புகள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும்.

ஆனால் நாம் போதுமான நேரம் தூங்க விட்டாலோ அல்லது இரவு நேரத்தில் அடிக்கடி வேண்டும் விழித்துக்கொள்ள நேர்ந்தாலோ நமது உறுப்புகளின் சீரமைப்பு செயல்முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது நமது ஆற்றல் அளவுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. ஆகவே இத்தனை நன்மைகள் தரக்கூடிய தரமான தூக்கத்தை பெறுவதற்கு உதவும் ஒரு சில பழக்க வழக்கங்கள் குறித்து இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வதும், எழுவதும் : நன்றாக தூங்கும் பழக்கமுடைய ஒரு நபர் தினமும் இரவு ஒரே நேரத்தில் படுத்து, காலை ஒரே நேரத்தில் எழுவார். இதில் வார இறுதி நாட்களும் அடங்கும். குறைவான நேர தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அதிகப்படியான தூக்கமும் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். வார இறுதி நாட்களில் நீங்கள் அதிக நேரம் தூங்கினாலோ அல்லது வழக்கத்தை விட வேறு நேரத்தில் தூங்க சென்றாலோ அது உங்களது தூக்க சுழற்சியை பாதித்து தூக்கத்தின் தரத்தை மோசமாக்கும்.

தூங்குவதற்கான சூழல் : நாம் படுத்து உறங்கக்கூடிய அறை, சத்தம் இல்லாமல், இருட்டாகவும், ஓய்வு தரக்கூடிய மற்றும் அதே நேரத்தில் நமக்கு சௌகரியமான வெப்ப நிலையில் இருக்க வேண்டும். படுக்கை அறையில் டிவி, கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். படுக்கைக்கு சென்றவுடன் 10 முதல் 20 நிமிடங்களில் ஒருவர் தூங்கி விட வேண்டும். நீங்கள் படுத்து உறங்கும் மெத்தை உங்களுக்கு சௌகரியமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கழுத்து வலி அல்லது முதுகு வலியால் நீங்கள் நடு இரவில் விழித்துக் கொள்ளலாம்.

விரைவில் செரிமானம் ஆகக்கூடிய இரவு உணவு : தரமான தூக்கம் பெறக்கூடிய நபர்கள் பெரும்பாலும் அதிக கலோரி கொண்ட உணவு, மது, புகைப்பிடித்தல், அல்லது காஃபின் போன்றவற்றை இரவு நேரத்தில் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இது போன்ற விஷயங்கள் நமது உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு தருவதற்கு பதிலாக இரவு முழுவதும் அதிகப்படியான நேரம் வேலை செய்ய வழிவகுக்கும். இதனால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் : பகல் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், இரவு நேரத்தில் நீங்கள் நன்றாக தூங்கி எழுந்து, அடுத்த நாள் காலை விழிக்கும் பொழுது ஓரளவு உங்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்க வேண்டும். இது நிகழாவிடில் உங்களுக்கு பிரச்சனை தான். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உணவு சாப்பிட்டபின் ஒரு சிறிய நடைபயிற்சிக்கு செல்லலாம் அல்லது புத்தகம் வாசிப்பது போன்றவற்றை செய்யலாம்.

தினமும் தியானம் செய்தல் : தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆழ்ந்த மற்றும் இடைவிடாத யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் தியானம் செய்வது நல்ல தூக்கம் பெறுவதற்கு உதவும். ஓய்வு தரக்கூடிய நுட்பமான தியானம் தூக்கமின்மையை போக்கி, மனதிற்கு அமைதியை தருகிறது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது : நம்மில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக செய்யக்கூடிய ஒரு தவறு காலை உணவை தவிர்ப்பது. ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடாவிட்டால் நாம் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காலை உணவை தவிர்ப்பவர்கள் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், இவர்களிடத்தில் மனச்சோர்வு அதிகப்படியாக இருப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

பகல் நேரத்தில் அதிக நேரம் தூங்காமல் இருப்பது : பகல் நேரத்தில் உங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சிறிய தூக்கம் எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் பகலில் தூங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கிய பிறகும் காலை எழும்பொழுது ஃபிரஷ்ஷாக இல்லாவிட்டால் இதற்கு பின்னணியில் ஏதேனும் மருத்துவ ரீதியான காரணங்கள் இருக்கலாம். எனவே இதனை தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip

0 Comments:

Post a Comment