Search

இரவு நல்லா தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த பிரச்சனை இருக்கலாம்..!

 நமது ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க இரவு தூக்கம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. மொபைல் போனை சார்ஜ் செய்வது போல நாம் தூங்கும் சமயத்தில் நமது உடலானது தன்னை மீட்டமைத்து கொள்ளும் வேலையை பார்க்கிறது. எனினும், நல்ல இரவு தூக்கத்தை நம் உடலுக்கு நாம் அளிக்கவில்லை என்றால் நோய்கள் மூலமாக நமக்கு பதிலடி கொடுக்கிறது. இன்னும் சிலர் இரவு நன்றாக தூங்கிய பிறகும் காலை எழும்பொழுதே சோர்வுடன் காணப்படுவார்கள். இது ஸ்லீப் ஆப்னியா என்ற தூக்க கோளாறு இருப்பதைக் குறிக்கிறது.

தூங்கும் பொழுது மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமங்கள் அல்லது சிக்கல்கள் ஸ்லீப் ஆப்னியா என வரையறுக்கப்படுகிறது. இதன்போது காற்றுப்பாதையானது பாதியளவு அல்லது முழுவதுமாக மூடி மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இது ஒரு சில வினாடிகள் முதல் ஒரு சில நிமிடங்கள் வரை இரவு முழுவதும் பலமுறை ஏற்படலாம். இதன் விளைவாக தூக்கத்தில் தடை ஏற்பட்டு அடுத்த நாள் பகல் பொழுது முழுவதும் தூக்க கலக்கத்தோடு உணர வைக்கும். ஏற்கனவே இதய நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாயின் குறைந்த இரத்த ஆக்சிஜன் காரணமாக இது சீரற்ற இதயத்துடிப்பை உண்டாக்கும்.

​​ஸ்லீப் ஆப்னியா மற்றும் இதய நோய்களுக்கு இடையே உள்ள தொடர்பு : 

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஸ்லீப் ஆப்னியா காரணமாக இதய நோய்கள் ஏற்படலாம். மேலும் இதய நோய் காரணமாகவும் ஸ்லீப் ஆப்னியா உண்டாகலாம் என்பதுதான்.

ஸ்லீப் ஆப்னியா காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜன் அளவு குறைகிறது. இது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை அளித்து இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும் ஸ்லீப் ஆப்னியா வழக்கமான தூக்க சுழற்சியை சீர்குலைப்பதன் மூலமாக அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் நமது இதயத்தை மோசமாக பாதித்து அதனால் வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற வளர்சிதை மாற்ற கோளாறுகளை உண்டாக்குகிறது. இது தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

​​ஸ்லீப் ஆப்னியா இருப்பதை தெரிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்

போதுமான நேரம் தூங்கிய பிறகும் தூங்கி எழும்பொழுதே சோர்வாகவும், சோம்பேறித்தனமான உணர்வோடு இருப்பது ஸ்லீப் ஆப்னியாக்கான முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு அதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் போனதன் விளைவு தான் இது.

பகல் நேர தூக்க கலக்கம் தவிர சத்தமாக குறட்டை விடுவது, அடிக்கடி இரவில் காரணமின்றி விழித்துக் கொள்வது, காலை நேர தலைவலி, தூங்கி எழும் பொழுது வறண்ட வாய் மற்றும் தொண்டை வலியை அனுபவிப்பது, கவனம் செலுத்துவதில் சிக்கல், எரிச்சல் மற்றும் உணர்வு மாற்றங்கள் ஸ்லீப் ஆப்னியாவிற்கான பிற அறிகுறிகளாக உள்ளன.

ஸ்லீப் ஆப்னியாவிற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். கூடுதலாக இது ஞாபக சக்தி குறைபாடு, கவனம் செலுத்துவதில் பிரச்சனை போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். அது மட்டுமல்லாமல் இதன் விளைவாக விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

​​ஸ்லீப் ஆப்னியாவிற்கான சிகிச்சை

மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இதற்கு ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. ஸ்லீப் ஆப்னியாவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் கன்டினுவஸ் பாசிடிவ் ஏர்வே பிரஷர் தெரப்பியில் (continuous positive airway pressure - CPAP) தூங்கும் பொழுது மூக்கு அல்லது வாயில் மாஸ்க் அணிந்து கொள்வது தடை இல்லாத காற்றோட்டத்தை பெற்று தர உதவுகிறது. இது தவிர ஓரல் அப்ளையன்ஸ், வாழ்க்கை முறை மாற்றங்கள் (உடல் எடை குறைப்பது மற்றும் உடற்பயிற்சி), பொசிஷனல் தெரபி மற்றும் சில சமயங்களில் அறுவை சிகிச்சை கூட செய்யப்படுகிறது.

உங்களுக்கு ஸ்லீப் ஆப்னியா இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்வது அவசியம். உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் நல்ல இரவு தூக்கம் மிகவும் அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment