முட்டையின் மஞ்சள் கரு உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து நீண்ட காலமாகவே விவாதம் நடைபெற்று வருகிறது. மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் நம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதி பெரும்பாலான மக்கள் அதனை ஒதுக்கி விடுகின்றனர்.
இன்னும் சிலர் ஒட்டுமொத்தமாகவே முட்டையை தங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆனால் உண்மையாகவே முட்டை ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து நாம் விரிவாக பார்க்க வேண்டி இருக்கிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர் மிடேன் ககையா கூறுகையில், “முட்டையின் மஞ்சள் கரு தீங்கு விளைவிக்கும் என்று பரவலான நம்பிக்கை இருந்தாலும் அது கட்டுக்கதை தான். உண்மையை சொல்ல போனால் காலை உணவிலேயே முட்டையை நாம் சேர்த்துக் கொள்ளலாம். நம் உணவு பட்டியலில் அது இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டாம்
மற்றவர்களைப் போலவே மஞ்சள் கரு தீங்கானது என்று கருதி அதனை தூக்கி எறிவதற்காக முட்டையை இரண்டாக உடைத்த நபர்களில் நீங்களும் ஒருவரா! எத்தனை முறை இதுபோன்று தூக்கி எறிந்திருப்பீர்கள். மஞ்சள் கருவை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்து இதய நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று நினைத்துள்ளீர்களா? உங்கள் கவலையை ஒதுக்கி விடுங்கள்.
கடந்த 1968 ஆம் ஆண்டில் அமெரிக்க இதய நல சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
உணவு மூலமாக சேர்கின்ற கொலஸ்ட்ரால் ரத்தத்தில் நேரடியாக கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கும் என்ற தன்மையின் அடிப்படையில் இந்த அறிவுரையை அந்த சங்கம் வழங்கியிருந்தது. எனினும் நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும், ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விரிவான ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக ககையா தெரிவித்தார். ஆகவே முட்டையின் மஞ்சள் கரு குறித்து கவலை கொள்ள தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.
முட்டையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்
முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நீங்கள் கவலைப்படுவதை காட்டிலும், அதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன என்பதனை சிந்தித்துப் பார்த்தால் அதன் நன்மை உங்களுக்கு புரிய வரும். முட்டையில் A, D, E, K, B1, B2, B5, B6, B9, B12 ஆகிய ஊட்டச்சத்துக்களும், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற மினரல்களும் உள்ளன. இவையெல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடியவை மற்றும் எலும்புகளை வலுவூட்டக்கூடியவை. ரத்தசோகை போக்குவதற்கு இரும்பு சத்து மிகவும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment