அடிக்கடி தனியாக வெளியூர் செல்லும் பெண்களா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

 

உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஆண்களோடு ஒப்பிடும்போது, பெண்கள் குறைந்த அளவில்தான் பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை. இந்த பயணங்கள் புதிய நபர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும், அன்றாட வாழ்க்கையின் டென்ஷன்களில் இருந்து விடுபட்டு மனதை ரிலாக்ஸ் செய்ய ஒரு நல்ல அமைதியான நேரத்தையும் வழங்குகிறது.

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது, ஒவ்வொரு பெண்ணும் ஒரு சுதந்திர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தனியாகப் பயணிக்கும் பல பெண்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு கவலைப்படுவதை விட்டு, தனியாகப் பயணம் செய்யும்போது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்லும் இடத்தை பற்றி நன்கு அறிதல் : நீங்கள் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் பார்வையிட விரும்பும் இடத்தைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சியானது, தவறான தகவல் மற்றும் தேவையற்ற தொந்தரவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு பயணிக்கும்போது தவிர்க்க வேண்டியவை பற்றிய தகவல்களையும் நீங்கள் சேகரிக்கலாம்.

தங்குமிடத்தை சரிபார்ப்பது : புதிய ஊர்களுக்கு சென்று தங்குவதற்கு இடம் தேடி அலைவது சிரமமாக இருக்கும் எனவே , தனியாக பயணம் செய்தால் தங்குமிடத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிகவும் பாதுகாப்பானது. மேலும், நீங்கள் தங்கியிருக்கும் சுற்றுப்புறத்தைப் பற்றிய உணர்வை முழுமையாகப் பெற, பகல் நேரத்தில் விடுதிக்கு வருவதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் தங்குமிடத்தைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.

உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்வது : பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது அதிக அளவிலான பைகளை எடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான அளவு பொருட்களை மட்டும் எடுத்து வைத்து, செல்வதால் உங்கள் பயணம் இலகுவாக இருக்கும், பெரிய சிரமம் எதுவும் இருக்காது. எப்போதும் பவர் பேன்க், ஹெட்ஃபோன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம்.

புதிய நட்பை ஏற்படுத்துவது : வெளியூர் பயணத்தின்போது அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பழகி ​புதிய நட்பை ஏற்படுத்தி, கொள்வது நல்லது. ஆனால் உங்கள் தங்குமிட விவரங்களை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. யாராவது அதிகமான கேள்விகளைக் கேட்டால் அவர்களின் கேள்விகளுக்கு பதிலாக வேறு செயல்களில் அவர்களை திசை திருப்பி அவ்விடத்தை விட்டு செல்வது நல்லது. முக்கியமாக நீங்கள் பயணம் செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களையும் தங்கும் இடங்கள் பற்றிய விவரங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை எடுத்துச் செல்வது : சரும ஆரோக்கியத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் பாடி லோஷன், சீரம், சன்ஸ்கிரீன் லோஷன், லிப் பாம், போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள். முக்கியமாக பயணத்தின் போது சிலருக்கு மாதவிடாய் ஏற்படுமாயின் சானிட்டரி பேடுகள், தலைவலி மருந்துகள், காய்ச்சல் மாத்திரைகள் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளவேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக முகக்கவசங்களை அணிவது, சானிடைசர்களை எடுத்துச் செல்வதும் அவசியம். இது போன்ற முன் ஏற்பாடுகளை செய்துகொள்வதன் மூலம் உங்களின் தனியாக பயணம் மேற்கொள்ளும் அனுபவம் சிறப்பாக அமையும்.


0 Comments:

Post a Comment