தற்போது கோடை காலம் என்பதால், வீட்டில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களும் அதிகம் சூடாகின்றன. ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி என எதை தொட்டாலும், வெப்ப அலைகள் எந்த அளவுக்கு இந்த சாதனங்களை பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அதிலும் குறிப்பாக ஃபிரிட்ஜை எடுத்துக்கொண்டால், கடுமையான வெப்பம் காரணமாக அதன் எல்லா பக்கங்களும் சூடாக இருக்கிறது. ஏசி அதிகம் வெப்பமடைவதைத் தடுக்க, சீரான இடைவெளியில் அதை ஆஃப் செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால் ஃப்ரிட்ஜை பொறுத்தவரை அதை நாம் 24 மணிநேரமும் இயக்குகிறோம். இதன் காரணமாக கோடை காலத்தில் ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸர் மிக வேகமாக சூடாகிறது.
இதனால் ஃப்ரிட்ஜின் குளிர்ச்சி பாதிக்கும். கோடை காலத்தில் ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸர் நிற்காமல் வேலை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்கள் ஃப்ரிட்ஜ் பழையதாக இருந்தால், நிச்சயமாக அதிக மின்சாரத்தை செலவழிக்கும். மேலும் பழைய மாடல்கள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. எந்தவொரு ஃப்ரிட்ஜுக்கும் பின்னால் போதுமான இடைவெளி இருப்பது முக்கியம்.
நீங்கள் ஃப்ரிட்ஜை சுவருக்கு அருகில் வைத்திருந்தால், அதன் கம்ப்ரஸருக்கு போதுமான காற்று கிடைக்காமல் போகும். இதனால் விரைவாக சூடாகி, சில சமயங்களில் ஃப்ரிட்ஜின் மோட்டாரில் தீ பற்றக்கூட அதிக வாய்ப்பு உள்ளது.உங்கள் ஃப்ரிட்ஜ் மாடல் மிகவும் பழையது என்றால் அதில் அமோனியா வாயு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த வாயுக்கள் எரியும் தன்மையுடையவை. ஆகையால் இந்த மாதிரி ஃப்ரிட்ஜ்களில் வாயு கசிவு ஆபத்து மிக அதிகமாக இருக்கும்.
ஃப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்?
வீட்டில் இடத்தை மிச்சப்படுத்துவதற்காக, பலரும் சுவருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைத்திருப்பார்கள். இந்த தவறை நாம் ஒருபோதும் செய்யவே கூடாது. ஃப்ரிட்ஜிற்கும் சுவருக்கும் இடையில் குறைந்தது 4-6 இன்ச் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
எல்லா கம்ப்ரஸர்களுமே சில சத்தங்களை எழுப்புவது இயல்பானதே. ஆனால் உங்கள் கம்ப்ரசர் அதிக சத்தம் எழுப்பினாலோ அல்லது சத்தம் இல்லாமல் இருந்தாலோ நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை ஃப்ரிட்ஜில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது.
சுத்தப்படுத்துதல்:
நம்மில் பலரும் ஃப்ரிட்ஜின் உட்புறத்தை சுத்தம் செய்தாலும் அதன் வெளிப்புறத்தை கண்டுகொள்வதே இல்லை. உங்கள் ஃஃப்ரிட்ஜிலிருந்து நல்ல குளிர்ச்சி வர வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதன் பின்பகுதியில் உள்ள காயில்கள் மற்றும் துவாரங்களில் தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
பொருட்களை அதிகமாக நிரப்புவது ஆபத்தானது:
ஃப்ரிட்ஜை ஒருபோதும் ஸ்டோர் ரூமாக பயன்படுத்த கூடாது. சிலர் வீட்டிலுள்ள அத்தனை பொருட்களைகளையும் ஃப்ரிட்ஜின் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள். இதனால் காற்று சுழற்சியும், குளிர்ச்சியும் சரியாக இருக்காது.
உங்கள் ஃப்ரிட்ஜ் மிகவும் பழையதாக இருந்தால், அதற்கு அதிக கவனம் தேவைப்படும். ஆகையால் 10 ஆண்டுகளுக்கும் மேலான சாதனங்களை ஆண்டுக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் குளிர்ச்சி சரியாக இல்லை என்று நீங்கள் ஒருவேளை உணர்ந்தால், கால தாமதமின்றி ஒரு தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஃப்ரிட்ஜை பரிசோதிக்கவும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment