Search

குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்துகளா..? பெற்றோர்களே உஷார்..!


 இன்றுள்ள குழந்தைகள் பலரும் ஜங்க் ஃபுட்களை மிகவும் விரும்பி உண்கிறார்கள். ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது குழந்தைகளின் உடல்நலத்தில் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கொழுப்பு கல்லீரல் நோய் முதல் வளர்சிதை கோளாறுகள் வரை என இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான டயட்டை ஏன் கொடுக்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் இதோ…

1. கொழுப்பு கல்லீரல் நோய் : ஜங்க் ஃபுட்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையும் கொழுப்பும் உள்ளது. குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. ஜங்க் ஃபுட்களில் இருப்பது வெறும் சக்கையான கலோரிகளே. இது கல்லீரலின் மெடபாலிக் நடைமுறையை பாதித்து கொழுப்பு சேர்வதற்கும் வீக்கம் அடைவதற்கும் காரணமாக அமைகிறது. அளவுக்கதிகமாக ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

2. மெடபாலிக் கோளாறு : அதிக பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட்கள் குழந்தைகளின் மெடபாலிக் ஆரோக்கியத்தில் பெரும் அழிவை உண்டாக்குகிறது. இதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புதன்மை, உடல் பருமன், டைப்-2 டயாபடீஸ் போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வரத் தொடங்குகின்றன. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைடரேட்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகளின் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம்.

3. ஊட்டச்சத்து குறைபாடு : நாம் விரும்பி உண்ணும் ஜங்க் ஃபுட்களில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை. இதனால் வளர்ச்சியடையும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின், தாதுக்கள் மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துகளில் குறைபாடு ஏற்படுகிறது. தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

4. நடத்தைகள் மற்றும் அறிவாற்றலில் ஏற்படும் தாக்கம் : ஜங்க் ஃபுட் சாப்பிடுவதற்கும் குழந்தைகளின் மோசமான நடத்தைகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளான கவனமின்மை, மனநிலை மாற்றம், படிப்பில் ஆர்வம் குறைவது ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உங்கள் குழந்தைகளின் கவனத்தையும் அறிவாற்றல் செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்த பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை கொடுங்கள்.


5. நீண்டகால விளைவுகள் : ஜங்க் ஃபுட் உணவுகளால் வரக்கூடிய பின்விளைவுகளை குழந்தைப் பருவத்தை தாண்டியும் அனுபவிப்பீர்கள். சிலர் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் இதய நோய்கள், புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் போன்ற எண்ணற்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள். குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் பெற்றோர்களாகிய நீங்கள் நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி உங்கள் குழந்தைகளை வழிநடத்திச் செல்ல முடியும்.

இன்றைய சமூகத்தில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லாத ஜங்க் ஃபுட்களே எங்கும் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளின் டயட்டில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முடியும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment