பிறப்பு , பள்ளிச்சான்று அடிப்படையில் ஆதாரில் பிறந்த தேதி மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

    Education News (கல்விச் செய்திகள்) 

IMG-20250517-WA0008_wm

பிறப்புச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்று அடிப்படையில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு ஆதார் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை மாவட்டம் அய்யம்பட்டி ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனு: எனக்கு இன்பராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் ஒரு விபத்தில் 2024 டிச., 22 ல் இறந்தார். குடும்ப ஓய்வூதியத்திற்காக எனது ஆதார் அட்டை நகலை ராணுவ நிர்வாகத்தில் சமர்ப்பித்தேன். அப்போது என் பிறந்த தேதி 2006 மே 2 என்பதற்கு பதில் 2005 மே 2 என குறிப்பிட்டிருந்ததை அறிந்தேன். பிறந்த தேதியில் திருத்தம் செய்து ராணுவ அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக டில்லியிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் விண்ணப்பித்தேன்.​பதிவு விண்ணப்பம் மற்றும் பிறந்த தேதி ஆவணச் சான்றிலுள்ள விபரங்கள் பொருந்தும் வகையில் இல்லை எனக்கூறி ஆன்லைன் மூலம் நிராகரித்தனர். அது சட்டவிரோதமானது என ரத்து செய்ய வேண்டும். பிறந்த தேதியை திருத்தம் செய்து வழங்க தனித்துவ அடையாள ஆணையம், மதுரை புதுார் ஆதார் பதிவு மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


நீதிபதி வி.லட்சுமி நாராயணன்: ஆவடியிலுள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் 2006 ஜூன் 23 ல் வழங்கிய பிறப்புச்சான்றை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார். இதன்படி மனுதாரர் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவர் பிறந்த 2 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழங்கிய பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை (பிளஸ் 2) பள்ளிச் சான்றுகளில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது.


ஆதார் அதிகாரிகளிடம் உள்ள சான்றானது, அது ஒருவேளை மனுதாரரால் ஏற்பட்ட தவறின் விளைவானதாகக்கூட இருக்கலாம். பிறப்புச் சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றுகளின் அடிப்படையில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என முடிவு செய்கிறேன். இதன்படி மாற்றம் செய்து ஆதார் சான்றை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment