Search

பெண்களை அதிகமாக தாக்கும் 5 புற்றுநோய்கள்.. தடுக்கும் வழிகள் என்ன..?

 

கேன்சர் என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு மோசமான உயிர்கொல்லி நிலை ஆகும். இது ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்கள் உள்ளதால் இதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பல உள்ளன.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பொதுவாக அவர்களுடைய மரபணு காரணமாக புற்று நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் இந்தியாவில் இந்த நிலை நேர்மாறாக இருக்கிறது. இங்கு பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்று நோய்களால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.

இந்த புற்று நோய்களுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கும், அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும், நோயிலிருந்து மீண்டு வருவதற்கும் மிக மிக முக்கியம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் பெண்களை அதிக அளவில் தாக்கக்கூடிய புற்றுநோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

  • கருப்பை புற்றுநோயானது அண்டகங்களில் துவங்குகிறது. இது குடும்ப வரலாறு, வயது மற்றும் BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது. வயிற்று உப்புசம், இடுப்பு குறி பகுதியில் வலி மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் போன்றவை இந்த புற்றுநோயின் சில அறிகுறிகள்.

  • கருப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் இருந்து தொடங்குகிறது. இது பொதுவாக பாலியல் உறவின் போது பரவும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (human papillomavirus - HPV) காரணமாக ஏற்படும் தொற்றின் விளைவாக உண்டாகும் புற்றுநோய். பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்தக்கசிவு, உடலுறவின் பொழுது வலி மற்றும் பிறப்புறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக திரவங்கள் வெளியேறுதல் போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • வுல்வார் (Vulvar) புற்றுநோய் என்பது பெண்களின் பிறப்புறுப்பு பகுதி மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு இடையே உள்ள ஒரு தோலில் ஏற்படும் புற்றுநோய் வகையாகும். இது HPV தொற்று, புகைப்பிடித்தல் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகள் காரணமாக ஏற்படுகிறது. வுல்வா பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு, எரிச்சல் மற்றும் அசாதாரணமான வளர்ச்சிகள் இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

  • எண்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையின் ஓரங்களில் துவங்கும் புற்றுநோய். இது யூட்டரின் அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோய் (Uterine/Endometrial Cancer) என்று அழைக்கப்படுகிறது. உடற்பருமன், வயது, ஹார்மோன் சிகிச்சை மற்றும் குழந்தையின்மை போன்றவை இந்த புற்றுநோய்க்கான சில அபாய காரணிகளாக அமைகின்றன. பிறப்பு உறுப்பில் அசாதாரணமான ரத்த கசிவு, வழக்கத்திற்கு மாறான உடல் எடை குறைவு, இடுப்பு குழி பகுதியில் வலி போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • யோனி புற்றுநோய் என்பது HPV தொற்றுஃ புகைப்பிடித்தல் மற்றும் கருவறையில் இருக்கும் பொழுது diethylstilbestrol (DES) -க்கு வெளிப்படுத்துதல் காரணமாக ஏற்படுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்த கசிவு, பிறப்பு உறுப்பில் வழக்கத்திற்கு மாறான திரவ வெளியேற்றம், உடலுறவின்பொழுது வலி போன்றவை யோனி புற்றுநோயின் அறிகுறிகள்.

புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை Pap சோதனை மற்றும் HPV சோதனை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இப்போது இந்த புற்று நோய்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம்…

  • கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதற்கு மறக்காமல் HPV தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது புற்றுநோயை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. சரிவிகித உணவை சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, புகையிலையை தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அடங்கும்.

  • உங்களுடைய வயது மற்றும் அபாய காரணிகளின் அடிப்படையில் அடிக்கடி புற்றுநோய் சோதனைகளை மேற்கொள்வது உதவக் கூடும்.

  • உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு யாருக்காவது மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈடுபடுவது அவசியம்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment